கோயில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம்; ரூ.16.70 கோடியில் பணிகள் துரிதம்

சேலம்: சேலம் மண்டலத்தில் நிலத்தடி நீரை பெருக்கும் வகையில் கோயில் திருக்குளங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் துரிதகதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவரின் வாய்மொழி. இதன்படி நீரை சேமிப்பதற்கான பல்வேறு திட்டப்பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள கோயில் குளங்களில் மழைநீரை சேமிப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்து சயம அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 45,968 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் 2,359 திருக்குளங்கள் உள்ளன. இந்த குளங்களை சீரமைத்து மழைநீரை சேகரிப்பது அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருக்குள வல்லுநர்கள், ஆலோசகர்களின் ஆலோசனை கேட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குளத்தின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளங்களை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும்.

குளங்களை அவ்வப்போது தூர்வாருவதோடு ஆழப்படுத்த வேண்டும். எந்த பாதிப்புகளும் இல்லாத வகையில் குள படிகளை சீரமைக்க வேண்டும். இதேபோல் குளத்திற்கு மழை நீர் வருவதற்கும், அதேபோல் உபரிநீர் முறையாக வெளியேறி செல்வதற்கும் உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக குளங்களை சீரமைக்க ₹16.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் சேலம் மண்டலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கோயில்களின் குளங்களில் மழைநீரை சேமிப்பதற்கான திட்டப்பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகள் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலத்தில் 1500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுவாக கோயில் குளங்கள் நிலத்தடி நீர்மட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கிறது. கோயில் குளத்தில் மழைநீர் தேங்கினால் அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது. இந்த அடிப்படையில் தான் நமது முன்னோர்கள் கோயில்களில் குளங்களை வெட்டினர்.

கோயில் குளங்களை பாதுகாக்கவும், மழைநீர் சேகரிக்கவும்  தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு பாத்தியப்பட்ட திருகுளங்களை தூர்வாரி மழைநீர் சேகரிக்க அரசு அனுமதியளித்தது. அந்த வகையில், சேலம் மண்டலத்தில் 50 கோயில்களில் குளங்கள் சீரமைக்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் சுகவனேஸ்வரர்,  நங்கவள்ளி சோமேஸ்வரர், லட்சமிநாராயணசுவாமி, தாரமங்கலம் கைலாசநாதர் என்று பத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பணிகள் நடந்துள்ளது. இந்த கோயில்களில் ஊற்றுப் பகுதிகள்  ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இடிந்த படிக்கட்டுக்களை சீர்செய்தல்,  இடிந்த, பழுதடைந்த சுற்றுச்சுவர்களை கட்டுதல், குளத்தை சுற்றி வெள்ளை அடித்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைக்கழிவுகள் கொட்டாமல் இருக்க குளத்தை சுற்றி இரும்பு கிரீல் அமைக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு அருகே அசுத்தம் செய்யக்கூடாது, அனுமதியின்றி யாரும் உள்ளே செல்லக்கூடாது, குளத்தில் கழிவுகளை கொட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் குளங்கள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்று பக்தர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.