சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர்
இன்று (செப்டம்பர் 4) கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், சென்னை பழைய சட்டக் கல்லூரிக் கட்டடத்தைப் புதுப்பித்தல் மற்றும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, நான் பெருமையும் அடைந்து கொண்டிருக்கிறேன். 1862ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நிறுவப்பட்டது இந்த உயர் நீதிமன்றம். அந்த வகையில் பார்த்தால் இது 160ஆவது ஆண்டு.
160 ஆண்டுகள் பழமை என்பது இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே வாய்த்த பெருமை. நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்த ஒன்று. அதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. வள்ளுவரும், இளங்கோவடிகளும், புறநானூற்றுப் புலவர்கள் பலரும், நீதியின் மேண்மையைப் பற்றியும், செங்கோல் வழுவாமையின் சிறப்பினைப் பற்றியும் எழுதியுள்ளார்கள்.
அத்தகைய ஒரு திராவிட மரபுவழி வந்த நம் பண்பாட்டில் வளர்ந்த இந்த அரசு, அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து, மதித்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது. நீதித்துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் இருக்கிறது என்று தலைமை நீதிபதி ரமணா அவர்களே பாராட்டியுள்ளார்.
சில கோரிக்கைகளை, தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வருகை புரிந்திருக்கும் மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலாவதாக தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்க வேண்டும்.
எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இரண்டாவதாக, நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் தன்மையினை புரிந்து கொள்ளும் வகையில் உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமைய வேண்டும். மூன்றாவதாக, நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் நியமனங்கள் அமைய வேண்டும். இவற்றை இங்கு வருகை புரிந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் கனிவுடன் பரிசீலிப்பார்கள் என்று நம்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.