சென்னை: உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் பொக்கிஷமாக ஓடிடி தளங்கள் காணப்படுகின்றன.
வார விடுமுறையில் ஓடிடியில் பார்க்க வேண்டிய சிறந்த படங்கள் குறித்து பெரிய விவாதங்களே நடக்கின்றன.
அந்தவகையில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கான சிறப்பான படம் ஒன்றின் விமர்சனம் இதோ.
நெட்பிளிக்ஸில் கிடைக்கும் Mirage
தமிழில் மாநாடு, இன்று நேற்று நாளை, ஜீவி, நியூ போன்ற சயின்ஸ் பிக்சன் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படங்கள் அனைத்தும் டைம் லூப், டைம் டிராவல், தொடர்பியல், முக்கோண விதி என பல விதங்களில் சஸ்பென்ஸ் த்ரில்லர் பின்னணியில் வெளியாகியிருந்தன. ஆனால், ஒரே படத்தில் டைம் லூப், டைம் டிராவல் என இரண்டையும் சேர்த்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக எடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ள Durante la tormenta. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் Mirage என்ற டைட்டிலில் ஆங்கிலத்தில் காணக் கிடைக்கிறது.
புதுமையின் உச்சம் Mirage
அமானுஷ்யங்களை கடந்து மனிதனின் மனம் எப்போதுமே தனது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து சமநிலையில்லாமல் தடுமாறும். அப்படியான தடுமாற்றங்கள் சில நேரங்களில் நம் வாழ்வையை புரட்டிப் போட்டுவிடும். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லையென்றாலும், இப்படியொரு சிக்கலில் தவிக்கும் இரண்டு பாத்திரங்கள் நம் கண்முன் வந்து நின்றால் எப்படி இருக்கும் என்பதை பிரமாதமாக எடுத்துக் காட்டியிருக்கிறது Mirage திரைப்படம்.
இதுதான் Mirage-ன் கதை
1989ல் ஜெர்மனியில் பெர்லின் சுவர் வீழ்ந்துகொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இருந்து இந்தப் படத்தின் கதை விரிகிறது. ஒரு நாள் இடி, மின்னலுடன் மிகப் பெரிய புயல் வீசுகிறது. அப்போது ஸ்பெயினில் நிகோ என்ற சிறுவன் தனது வீட்டில் கிட்டார் வாசித்து அதை கேமராவில் பதிவுசெய்கிறான். அதேநேரம் எதிர்வீட்டில் ஏதோ சண்டை நடக்க, அது என்னவென்று பார்க்கப் போகிறான் நிகோ. அங்கே எதிர்வீட்டுக்காரன் தன் மனைவியைக் கொலைசெய்துவிட்டு, கத்தியோடு இறங்கிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தும் பயந்துபோய் வீட்டை விட்டு வெளியில் ஓடும் நிகோ கார் மோதி இறந்துவிடுகிறான்.
செம்ம ட்வீஸ்ட் இங்க தான்
அந்த காட்சி அங்கேயே முடிவடையே, கதை 2014க்கு பயணிக்கிறது. நிகோ வசித்த வீட்டில் வெரா – டேவிட் தம்பதி. அவர்களின் க்ளோரியா என்ற குழந்தையோடு குடியேறுகிறார்கள். அங்கே பழைய டீவியும் சில கேஸட்களும் இருக்கின்றன. அவற்றைப் போட்டுப் பார்த்தால், நிகோ ரெக்கார்ட் செய்த காட்சிகள் வருகின்றன. அன்றிரவு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசும்போது நிகோ விபத்தில் இறந்தது தெரியவருகிறது. அந்நேரம் 1989ல் ஏற்பட்டதைப் போல இடி மின்னலுடன் புயல் அடிக்கிறது. திடீரென டீவி ஓட அதிலிருந்து சிறுவன் நிகோ டிவியில் தெரிகிறான். வெராவாலும் அந்தச் சிறுவனுடன் பேச முடிகிறது. இதை பயன்படுத்தி அந்தச் சிறுவன் விபத்தில் உயிரிழப்பதை தடுக்க விரும்பும் வெரா, அவனை எதிர் வீட்டிற்குப் போகக்கூடாது என்கிறாள். அவனும் போகவில்லை. இதனால், நிகோ சாகாமல் தப்புகிறான்.
இறுதியில் என்ன ஆனது Mirage
இனிமேல்தான் விபரீதம் தொடங்குகிறது, நிகோவின் விபத்து தடுக்கப்பட அதற்குப் பிந்தைய காலத்தில் எல்லாமே மாறிவிடுகிறது. வெராவின் வாழ்வும் மாறிவிடுகிறது. வீட்டில் கணவர் டேவிட், அவளது குழந்தை யாரையும் காணவில்லை. மற்றவர்களோ வெராவுக்கு திருமணமே ஆகவில்லை என அடித்து சொல்கிறார்கள். மீண்டும் டிவி வழியாகச் சென்று, நிகோவை சாகவிட்டால், தனது குழந்தையும் குடும்பமும் திரும்பக் கிடைக்குமென நம்புகிறாள் வெரா. அது நடக்கிறதா என்பதுதான் கதை.
திரைக்கதையில் மாஸ்டர் க்ளாஸ்
மணி ஹெய்ஸ்ட் தொடரில் புரொஃபஸராக வரும் அல்வரோ மோர்தே இந்தப் படத்திலும் டேவிட் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பெரும் பலமே திரைக்கதைதான். டைம் லூப், டைம் டிராவல், சயின்ஸ் பிக்சன் ஜானர் என ரசிகர்கள் பயந்துவிட வேண்டாம் என்பதற்காக, குழப்பமே ஏற்படாத வகையில் திரைக்கதையை செதுக்கியுள்ளனர்.
இந்தியில் ரீமேக்கான Mirage
நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் என மூன்றையும் வைத்துக்கொண்டு அதில் பிரதானமாக இரண்டு கேரக்டர்களை வைத்து அதிரிபுதிரியாக மாஸ் காட்டியுள்ளது படக்குழு. Oriol Paulo இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை Do Baara என்ற பெயரில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார். 2018ல் வெளியான படமாக இருந்தாலும், வித்தியாசமான படம் பார்க்க விரும்பும் ஓடிடி ரசிகர்களுக்கு Mirage செம்ம ட்ரீட் தான்.