உக்கிரபாண்டியத் தேவர்- இந்து ராணி அம்மாள் ஆகியோருக்கு கடந்த 30.10.1908ம் ஆண்டு மகனாக பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். தேசப்பற்று, ஆன்மிக பற்று கொண்டு விளங்கிய முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார்.
சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேயர்களின் வாய் பூட்டு சட்டம் போன்ற பல்வேறு இன்னல்களையும் சந்தித்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த 30.10.1963ம் ஆண்டு பிறந்த தினத்திலேயே முத்துராமலிங்க தேவர் மறைந்தார். முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்கத் தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நினைவிடம் உள்ளது.
இந்த நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30ம் தேதி ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கடந்த 2014ம் ஆண்டு 14 கிலோ தங்க கவசத்தை பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வழங்கினார். இதன் மூலம் முக்குலத்தோர் மனதில் ஜெயலலிதா நீங்கா இடம் பிடித்தார்.
இதன் பிறகு அடுத்தடுத்த தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாக்களில்
கலந்துகொண்டார். இதற்காக மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் லாக்கரில் இருந்து, தங்க கவசத்தை அதிமுக பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் எடுத்து அணிவிப்பது வழக்கம்.
பின்னர் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா முடிந்ததும் கவசம் மீண்டும் லாக்கரில் வைக்கப்படும். இந்த லாக்கரின் சாவி, அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிடம் பொறுப்பாளர்களிடம் இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு ஓபிஎஸ் கையால் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுமா? என்பது தான் தற்போது கேள்விக் குறியாக உள்ளது. இதற்கு காரணம், அதிமுகவில் நிலவுகிற பிரச்சனைகள் தான்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையும் திண்டுக்கல் சீனிவாசனையே அதிகாரப்பூர்வ காப்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளதால் கவசம் அவரிடமே ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
தேவர் ஜெயந்திக்கு இன்னும் 55 நாட்கள் மட்டும் உள்ளதால் அதற்குள் அதிமுக தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தால்தான் முக்குலத்து மக்கள் முன்பாக கெத்தாக செல்ல முடியும் என்று ஓபிஎஸ் கருதுகிறார்.
எனவே உச்சநீதி மன்றத்தை உடனே நாடி அக்டோபர் 30ம் தேதிக்குள் தனக்கு சாதகமாக தீர்ப்பை பெற சட்ட வல்லுநர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் புதிய நெருக்கடியில் சிக்கி இருப்பது, அவருடைய ஆதரவாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.