ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தமது பெயரில் பெற்றிருந்தார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரான என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கொடுத்தது.
தேர்தல் ஆணையம் தடாலடி பரிந்துரை
பாஜகவின் இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்ய, மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ்க்கு பரிந்துரைத்தது. இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஆளுநர், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னமும் ஆளுநர் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார்.
மாநிலங்களில் உலா
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைபேசிவிடக் கூடும் என்பதால் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஹேமந்த் சோரன். தற்போது தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் முகாமிட்டார் ஹேமந்த் சோரன். தற்போது இந்த எம்.எல்.ஏக்கள் ராஞ்சி திரும்பிவிட்டனர்.
ஆளுநர் ரமேஷ் பாய்ஸ்
இதனிடையே ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸை ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில், தேர்தல் ஆணையம் என்ன பரிந்துரை செய்துள்ளது? என்பதை விளக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், டெல்லி சென்றார்.
நாளை வாக்கெடுப்பு
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் ஹேமந்த் சோரன் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதாவது தமது அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது என்பதை ஹேமந்த் சோரன் தாமாகவே முன்வந்து நிரூபிக்க உள்ளார். 81 எம்.எல்.ஏக்களைக் ஜார்க்கண்ட் சட்டசபையில் கட்சிகளின் பலம்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30; காங்கிரஸ் 18; ராஷ்டிரிய ஜனதா தள்- 1; பாஜக கூட்டணி- 28. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்து ஆபரேஷன் தாமரையை பாஜக அரங்கேற்றினால் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்படும்.