கரிசல் காட்டு தமிழச்சி என்பது பெருமை- தமிழச்சி தங்கபாண்டியன்

ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் 1159 பட்டதாரிகள், 75 முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்களில், 14 பேருக்கு பல்கலைக்கழக தரவரிசை விருதுகளும், 4 மாணவர்களுக்கு கல்வியில் முன்மாதிரியாக செயல்பட்டதற்காக நம்பிக்கை விருதுகளும் வழங்கப்பட்டன. 

மேலும் இந்த நிகழ்ச்சியின்போது, ஜேப்பியார் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் காப்பீட்டு மானியத்தை ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை வழங்கியுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தமிழச்சி தங்கபாண்டியன், பெண் சிங்கங்களே, ஆண் மயில்களே என மாணவ மாணவியர்களை அழைத்தார். பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும் என்றும் ஆண் மயில்களுக்கு தான் அழகான தோகை உண்டு என்றும் விளக்கமளித்த அவருக்கு மாணவர்கள் தங்கள் கைதட்டல்களால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆசிரியர் பெற்றோருக்கு பிறந்த தான் சொந்த ஊருக்கு சென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் என மக்கள் அழைக்க மாட்டார்கள் என்றும், ஆசிரியரின் மகள் என அழைப்பார்கள் என்றும் கூறிய அவர் அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் என்றார்.

ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் முக்கோணம் போல செயல்பட வேண்டியது குறித்தும், இந்த மூவரின் பிணைப்பு பற்றியும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் அவர் விரிவாக எடுத்துரைத்தார். பிள்ளைகள் தங்களுக்காக இருக்கும் பெற்றோரை விட தங்களுடன் இருக்கும் பெற்றோரைத்தான் விரும்புகிறார்கள் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார். மேலும் கல்வி கொடுத்த பாடசாலைகளுக்கு மாணவர்கள் தங்களால் ஆன உதவியை திரும்பச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், ஜேப்பியார் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மு.ரெஜீனா ஜேப்பியார், பல்கலைக்கழக அதிபர் முரளி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.