எண்ணி துணிந்தேன்… வெற்றி பெற்றேன் : இயக்குனர் வெற்றிச் செல்வன்
'கடலை மிட்டாய், வாட்டர் பாக்கெட்டு மட்டும் தான் எனக்கு சாப்பாடு. 15 வருஷ போராட்டம். இப்போ திரும்பி பார்த்தாலும் பல வலிகளை தாங்கி இன்று இயக்குனராகி இருக்கோம் என்கிறபோது சந்தோஷமா இருக்கு' என உற்சாகமாக பேசுகிறார் இயக்குனர் வெற்றிச்செல்வன்.
மதுரையில் இருந்து 'ரயில் ஏறி' சினிமா இயக்குனர்களாக மாறியவர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்திருக்கிறார். சொந்த ஊர் நாட்டார் மங்கலம். அப்பா, அம்மா தலைமை ஆசிரியர்கள். அவர்களே 'சினிமா துறைக்கு செல்' என ஊக்குவித்து வழியனுப்பி வைத்தது சினிமா படக் கதை மாதிரி இருக்கு. எப்படி நடந்தது என 'பிளாஷ்பேக்'கை சொல்கிறார் வெற்றிச் செல்வன்…
* உங்கள் பெற்றோர் ஆசிரியர்கள். நீங்கள் சினிமா இயக்குனர்… லாஜிக் இடிக்குதே
சிறுவயதில் ரஜினியின் 'மாவீரன்' படத்தை அப்பாவுடன் பார்த்தபோது நடிகனாக வேண்டும் என நினைத்தேன். பிறகு அப்பாவிடம் சொன்னபோது படத்தில் வரும் திருவள்ளுவர் சிலை லோகோவையும், அதோடு வரும் இயக்குனர் கே.பாலசந்தர் பெயரையும் காண்பித்து, 'நீ இயக்குனராக வா. ஒரு படத்திற்கு இயக்குனர்தான் முக்கியம். அதற்கடுத்துதான் நடிகர்கள்' என்றார். அவர் சொன்னபடி இயக்குனராக வரவேண்டும் என முடிவு செய்து சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். எந்த இயக்குனர் பெயரை பார்த்து அப்பா சொன்னாரோ, அந்த இயக்குனரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்திடமே உதவி இயக்குனராக சம்பளம் வாங்கியது எனக்கு பெருமை.
* சினிமாவுக்கு வர உங்க அம்மாதான் சிபாரிசு செய்தார்களாமே
ஆமாம். என் சினிமா ஆர்வத்தை பார்த்து அம்மாவின் தோழி டாக்டர் வளர்மதியிடம் சொன்னார். அவரது கணவர் மூலம் இயக்குனர் வசந்த்தின் அசோசியேட் இயக்குனர் ஆதி கணேசனின் தொடர்பு ஏற்பட்டது. கதை, வசனம் எப்படி எழுதுகிறேன் என பல 'டெஸ்ட்' வைத்து, இயக்குனர் வசந்த்திடம் சேர்த்தார். எங்கம்மா இயக்குனருக்கு போன் செய்து 'என் மகனை உங்ககிட்டே ஒப்படைச்சுட்டேன். காசெல்லாம் கொடுக்காதீங்க. ஒரு இன்ஸ்டிடியூட்டில் படிப்பது போல் அவன் இருக்கட்டும்' எனச் சொன்னார். அவரும் என்னை நல்லாவே பார்த்துகிட்டார். அவரிடம் சினிமா மட்டுமல்ல. வாழ்க்கையையும் கற்றுக்கிட்டேன்.
* இயக்குனராகுவதற்கு 15 வருஷம் ஏன்
நேரம் காலம் தான். நல்ல கதை இருந்தும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காது. சிலருக்கு உடனே கிடைச்சிடும். எனக்கு 15 வருஷமாச்சு. ஆனால் அந்த அனுபவம் எனக்கு நல்லாவே கை கொடுத்தது. வசந்த்திடம் பணியாற்றும்போது ஆரம்பத்தில் திட்டுவார். 'ஷாட்' முடிந்ததும் சாப்பிடாமல் பெட்டிக்கடைக்கு சென்று கடலை மிட்டாய் சாப்பிட்டு, வாட்டர் பாக்கெட்ல தண்ணி வாங்கி சாப்பிட்டுவிட்டு அழுவேன். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு மீண்டும் அவரிடம் செல்வேன். அதேசமயம் 'ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்' என எண்ணம் எனக்கு வரவில்லை. நாளடைவில் என் உழைப்பு, சின்சியாரிட்டியை பார்த்து எனக்கும், அவருக்கும் புரிதல் ஏற்பட்டது. அதன்பிறகு இத்தனை வருஷம் அவரோடு பயணித்தேன். இடையில் நண்பர்கள் கதை விவாதங்களில் பங்கேற்றேன்.
* முதல் படம் 'எண்ணி துணிக' பற்றி…
தமிழ் மீதான ஆர்வத்தால் படத்திற்கு தலைப்பு வைத்தேன். வள்ளுவர் மீது பற்று. அதனால் எண்ணித்துணிக கருமம் என்ற குறளில் இருந்து இந்த தலைப்பை வைத்தேன். ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானாலும் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது என சொல்கிறது. அதன் அடிப்படையிலான கதை என்பதால் இந்த தலைப்பை வைத்தேன். ஜெய், அதுல்யா போன்றோரின் ஒத்துழைப்பால் இன்று படம் சக்சஸாக போய் கொண்டிருக்கிறது. இதற்கு என் மனைவி உள்ளிட்ட குடும் பத்தினரின் சப்போர்ட்டும் காரணம்.
* அடுத்த படம்…
இரண்டு கதைகள் குறித்து 'டிஸ்கஷன்' போயிட்டு இருக்கு. விரைவில் 'கமிட்' ஆயிடும்.
இவ்வாறு கூறினார்.