ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பாக கணப்படும் முக்கிய சாலையில் மதுபோதையில் முதியவர் ஒருவர் அவ்வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டு வந்தார். மதுபோதையில் முதியவர் செய்யும் ரகளையை நீண்ட நேரமாக பார்த்து கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் முதியவரை தரதர வென இழுத்து சென்றார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது வழிவிடு முருகன் கோயில் சந்திப்பு. இந்த வழியாக மாலை நேரத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவோர் என பலரும் கடந்து செல்வதால் அந்த சாலை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை முதியவர் ஒருவர் மது போதையில் வழிவிடு முருகன் கோயில் சந்திப்பு நடுரோட்டில் நின்று கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூராக ரகளையில் ஈடுபட்டார்.
கோயில் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் அடித்த சரக்கால் போதை தலைக்கெறிய முதியவர், அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து ‘நான் ராஜாதி ராஜன்டா முடிஞ்சா அடிச்சு பாருடா’ என்று வசனம் பேசியதுடன் கெட்ட வார்த்தைகளால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை வசை பாடினார்.
ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்திற்கே சென்ற முதியவர் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவ்வழியாக வந்த அரசு விரைவு பேருந்தை நிறுத்தி வண்டிய நிறுத்து என்னை ஏத்திட்டு ஒரு எட்டு போய்ருவிய்யா நீ எங்க என்ன ஏத்தி பாரு என திமிராக பேசினார். வயது மூப்பின் காரணமாக வாகன ஓட்டிகள் யாரும் மதுபோதையில் இருந்த முதியவரை கண்டிக்காமல் கடந்து சென்றனர். தலைக்கேறிய போதை குறையததால் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக முதியவர் சாலையில் செல்வோரை வம்பு இழுத்து சடுகுடு ஆட்டம் ஆடி வந்தார்.
இதனை கவனித்து கொண்டிருந்த அப்பகுதியை சோந்த ஒருவர் மதுபோதையில் சலம்பல் செய்து கொண்டிருந்த முதியவரின் கையை பிடித்து தரதரவென நடுரோட்டில் இருந்து இழுத்து வந்து சாலை ஓரம் விட்டார். பின்னர் அந்த நபர் முதியவருக்கு போதை தெளிய வேண்டும் என்பதற்காக பேக்கரியில் டீ வாங்கி கொடுத்தார். ஆனால் போதையில் தள்ளாடிய முதியவரால் டீ கப்பை பிடித்து டீ குடிக்க கூட முடியவில்லை. மேலும் மேலும் போதை தலைக்கேறிய முதியவர் சாலையில் விழுந்து படுத்தே விட்டார். போதை முதியவரின் அலப்பறையால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இடையூறுக்கு ஆளாகினர். முக்கிய சந்திப்பான வழிவிடு முருகள் கோவில் அருகே பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்திருந்தால் இந்த முதியவரை ஆரம்பத்திலேயே அங்கிருந்து அப்புறபடுத்தி இருக்க முடியும் என பொதுமக்கள் புலம்பி சென்றனர். தமிழகத்தில் என்று பூரண மதுவிலக்கு அமலாகும் பூரணமாக மக்கள் வாழ்வு வளமாகும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுவரை போதையின் முன்னே பெரியவர் என்ன..! சிறியவர் என்ன..!