“என்எல்சி எங்களுக்கு தேவையில்லை; விரைவில் பூட்டு போடும் போராட்டம்'' – நெய்வேலி ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ஆவேசம்

கடலூர்: “தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை” என்று நெய்வேலியில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தைக் கண்டித்து பாமக சார்பில் இன்று காலை நெய்வேலி ஆர்ச்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ”இந்த ஆர்ப்பாட்டம் மிக முக்கியமான ஆர்ப்பாட்டம், என்எல்சி நிறுவனம் 1956 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டால் அதனால் ஏற்படும் வளர்ச்சி அந்த பகுதி மக்களுக்கு பயன்பட வேண்டும்.

ஆனால், என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டபோது சுமார் 44 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வீடு, நிலம் கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டது. கடந்த 66 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உரிய இழப்பீட்டுத் தொகையோ வழங்காமல் இன்று வரை மக்களை அகதிகளாக என்எல்சி நிர்வாகம் வைத்துள்ளது.

மேலும் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது. என்எல்சி நிர்வாகம் நிலக்கரி தோண்டுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை. என்எல்சி நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி வருகின்றனர்.

வீடு, நிலம் கொடுத்த பொதுமக்கள்,விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற என்எல்சி பொறியாளர்கள் தேர்வில் 299 பேர் தேர்வு செய்யப்பட்டதில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. எனவே தமிழருக்கு தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை.

என்எல்சி நிர்வாகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் விரைவில் நடத்துவோம். ராணுவத்தை கூட்டி வந்தாலும் எதிர்த்து நின்று எங்களது பணியை செய்வோம். இப்பகுதியில் உள்ள நமது மாவட்ட செயலாளர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்றென்றும் உங்களோடு தோள் கொடுப்பார்கள் உங்களை மீறி ஒரு பிடி மண்ணைக் கூட என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்த முடியாது. என்எல்சி நிறுவனத்தில் தமிழக அரசுக்கு நாலு சதவீத பங்குகள் உள்ளது.

அதன் காரணமாக தமிழக அரசு சார்பில் இயக்குனர் பெறுப்பில் உள்ளார். அதன் மூலம் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை கண்காணித்து முழுமையாக செயல்படுத்திட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் என்எல்சி நிர்வாகத்திற்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கும் வேண்டும் இல்லையென்றால் என்எல்சி நிர்வாகத்தை அகற்றும் வகையில் பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மாட்டுவண்டியில் வந்த அன்புமணி: முன்னதாக மாட்டு வண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரிய பூட்டுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நெய்வேலி ஆர்கேட் பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாட்டு வண்டியில் பெரிய பூட்டுடன் வந்து கலந்து கொண்டார்.

ஆர்ப்பட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”66 ஆண்டு காலமாக இந்த மண்ணையும், இந்த மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து, நிலத்தடி நீரை உறிந்து கடலில் அனுப்பி, கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக, என்எல்சி நிர்வாகம் மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்ட மக்களின் உரிமைகளை காப்பாற்ற தவறிய தமிழக அரசை கண்டிக்கின்றோம். இனி நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவது கிடையாது. நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது.

விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழித்து வளர்ச்சி என்பது எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு நீடித்த வளர்ச்சி தான் தேவை. இன்று நடைபெற்றது அடையாளப் போராட்டம் தான். அதற்காகத்தான் அடையாளத்துக்கு பூட்டை எடுத்து வந்துள்ளோம். அடுத்த முறை என்எல்சி நிர்வாகத்தை கண்டிப்பாக பூட்டி விடுவோம்..இதை நாங்கள் விடுவதாக இல்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாகவும் சந்திக்க இருக்கிறோம். அரசியல் ரீதியாகவும் இதனை போராட்டம் செய்ய உள்ளோம். மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் அடுத்தடுத்து போராட்டத்தை நடத்த இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.