பாஜக மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை வருகைக்கு பின்னர், தமிழக அரசியலில் பாஜக செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும், சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. ஒழுங்கா போன ஓடத்துல திடீரென ஓட்டை விழுந்தது போல, மதுரைக்கு வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம் பாஜகவை ரொம்பவே டேமேஜ் ஆக்கிவிட்டது.
அதிலும், செருப்பு வீசப்பட்ட விவகாரம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனைப்படி முன்கூட்டியே திட்டமிட்டதை அம்பலப்படுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கட்சியின் மானத்தையே கப்பல் ஏற்றியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பாஜக மீது கடுமையான அதிருப்தியும், கண்டன குரலும் எழுந்தபடியே உள்ளதால் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே அமைச்சர் காரின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மதுரை பாஜக மாவட்ட தலைவர் சரவணன் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது தொண்டர்களை வெகுவாக பாதித்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோதனையான நேரத்தில், மேலும் கட்சிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி மாற்று கட்சிகளில் சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது மதுரை சரவணனை தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த பாஜக தலைவர்கள் கட்சியைவிட்டு கிளம்பும் முடிவில் உள்ளதாக அரசல் புரசலாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதற்கு காரணம் கட்சியை விளம்பரப்படுத்த தாறுமாறாக செலவு செய்ய சொல்லி பாஜக மேலிடம் உத்தரவு போடுவதாகவும், சித்தாந்த ரீதியில் ஒத்து போனாலும் போதிய வசதி இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் ‘இது தேசிய கட்சி என்பது பெயரளவுக்குதான். மற்றபடி எல்லா செலவுகளையும் நிர்வாகிகள் சொந்த செலவில்தான் செய்ய வேண்டும்.
பாஜக மேலிடம் ஒதுக்கும் நிதி எங்கே போகுதுன்னே தெரியலை. இது, இப்படியே நீடித்தால்.. சித்தாந்தத்துடன் ஒத்துப் போகும் பல முக்கிய நிர்வாகிகளையும் கட்சி இழக்கும் நிலை வரலாம்.
சித்தாந்தம் மட்டும் இருந்தால் போதாது. பணமும் கையில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியில் நிலவும் உண்மையான சூழல்’ என்று பாஜக நிர்வாகிகளே கூறுவது கேட்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.