பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் அங்கு ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் அந்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற மழைப்பொழிவு பாகிஸ்தானில் பதிவாகவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தானின் கனமழை கிட்டத்தட்ட 1,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் இறந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு நிறுவனங்களும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலை காணப்படுகிறது. குறிப்பாக தெற்கில் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்கள். அதில் சிந்து மாகாணத்தில் குறைந்தது 180 பேர் இறந்துள்ளனர் என்றும் , அதைத் தொடர்ந்து கைபர் பக்துன்க்வாவில் 138 பேர் மற்றும் பலுசிஸ்தான் 125 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் சுமார் 14,68,019 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன, அதே நேரத்தில் 7,36,459 கால்நடைகள் வெள்ளத்தால் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 23 ஆயிரத்து 919 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 825 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. வரலாறு காணாத இந்த வெள்ளத்தால் பாகிஸ்தான் முழுவதும் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது.