தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. அதனை தொடர்ந்து 2024 இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
இவ்விரு தேர்தல்களை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என பாஜகவின் முக்கிய தலைவர்கள் இப்போதில் இருந்தே தெலங்கானாவுக்கு அவ்வப்போது படையெடுத்து வருகின்றனர்.
அங்கு மத்திய அரசின் நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது என அக்கட்சியின் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர். பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவின் வரிசையில் தெலங்கானாவுக்கு படையெடுக்கும் பாஜக முக்கிய பிரமுகர்களின் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சில தினங்களுக்கு முன் தெலங்கானா மாநிலத்துக்கு சென்ற அவர், காமாரெட்டி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் எங்கே பிரதமர் மோடியின் படத்தை காணோம் என்று கேட்டு, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முன்பே கடிந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரேஷன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாயில் அரிசி வழங்க மத்திய அரசு எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா?எனக் கேட்டும் கலெக்டரை கதிகலங்க செய்தார்.
ஒரு மாவட்ட ஆட்சியர் என்றும் பாராமல் பொதுவெளியில் வைத்து அவரை கடிந்து கொண்ட அமைச்சரின் செயலுக்கு பலதரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்துவரும் நிவையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடியுள்ளார் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ்.
‘ நீங்கள் ஒன்றும் இங்கு அறக்கட்டனை நடத்தவில்லை. ஜனநாயக நாட்டில் மக்களின் வரி பணத்தில்தான் அரசின் அனைத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த உண்மையை மறுந்துவிட்டு ஆவணத்துடன் செயல்படும் உங்கள் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. அராஜக போக்கை கைவிட்டு நல்வழியில் நடந்துக் கொள்ளுங்கள்’என்று ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், அதனை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே டேக் செய்துள்ளார்.
முன்னதாக, ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் எங்கே என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டதற்கு பதிலடியாக, வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் மீது அதன் விலையுடன் பிரதமர் மோடியின் படம் அச்சிட்டப்பட்ட நோட்டீஸை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தெலங்கானா மாநில அரசு.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாாக கூறி, பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தலைமையிலான மத்திய அரசையும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ஏற்கெனவே கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.