* விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கிவிட்டார். இதற்கு அப்பா விஜய்யின் முழு ஆசீர்வாதமும் உண்டு. முதலில் நடனத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார். அதற்காக வீட்டிற்கே வந்து பயிற்சி அளிக்கிறார்கள். அப்படிப் பயிற்சி அளிக்கும் நபரிடம் வெளியே இந்தச் செய்தியைக் கசிய விடக்கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாம். இதனையடுத்து வசனங்களை உச்சரிக்கும் விதம் பற்றிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களாம். இன்னும் நான்கு வருடங்களில் அவரைக் களமிறக்க ஏற்பாடு நடக்கிறது. இதற்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தாத்தா எஸ்.ஏ.சி சொல்லியிருந்தார். அந்த வாய்ப்பு நெடுங்காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. அதனால் மிகவும் வருத்தத்தோடு இருக்கிறார் தாத்தா.
* ஹங்கேரியிலிருந்து துபாய் வழியாகத் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார் இளையராஜா. அதேசமயம் துபாயிலிருந்து சென்னைக்குத் திரும்பினார் ரஹ்மான். இருவரும் விமானத்தில் ஏறும்போது நாலைந்து சீட் தள்ளித்தான் உட்கார்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இருவருமே செல்போனைப் பார்த்துக் கொண்டு வந்ததில் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ளவில்லை. விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையம் நுழைவதற்கான வண்டியில் ஏறும்போது கூட ரஹ்மான்தான் பார்த்திருக்கிறார். மாஸ்க் அணிந்து இருந்ததால்தான் இது நிகழ்ந்திருக்கிறது. அதன் பிறகுதான் ‘உங்களோடு நான் செல்பி எடுத்துக் கொள்ளலாமா?’ என்று ஆசையோடு கேட்டு இருக்கிறார் ரஹ்மான். ‘நல்லா எடுத்துக்கோ’ என்று ராஜா சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறார். பிறகு ரஹ்மான் செய்ததுதான் ஆச்சரியம். செல்பி எடுத்து முடித்த உடனேயே ராஜாவைத் தொட்டு வணங்கி ‘உங்க ஆசீர்வாதம் வேணும் சார்’ எனக் கேட்டு இருக்கிறார். ‘நல்லா இருய்யா’ எனத் தட்டிக் கொடுத்திருக்கிறார் ராஜா. உடன் இருந்த பயணிகளுக்கு இது காணக் கிடைக்காத காட்சியாக இருந்திருக்கிறது.
* பெரும் பொருளாதார சிக்கலில் இருக்கிறார் விஷால். மதுரை பைனான்ஷியரிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி செலுத்தி வந்தவர் அதிலும் சில பிரச்னைகள் ஏற்பட்டு அதை லைகாவிடம் மாற்றினார். இதற்காக இரண்டு படங்களில் அவர் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அப்படியில்லையெனில், விஷால் தயாரிக்கும் படங்களின் உரிமைகளைப் படம் ஓடிய பிறகு கொடுத்து விடுவதாகவும் சொல்லியிருந்தார். அந்த இரண்டையும் அவர் சரிவரக் கையாளவில்லை என்பதாலேயே நீதிமன்றம் சென்றது விவகாரம். விஷாலின் மொத்த சொத்துக்கணக்கையும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் ஆணையிட்டு விட்டது. இதில் சொல்லப்போனால், விஷாலின் பெயரில் எந்தச் சொத்துக்களும் பெரிதாக இல்லையாம். பல சொத்துக்களும் அவரது தந்தையார், தாயார் பெயரிலேயே உள்ளது என்கிறார்கள். ஆனாலும், அவரது அண்ணன், தங்கை என உரிமையாளர்கள் இருவர் உள்ளனர். எனவே, சமாதானத்திற்காக லைகாவை விஷால் நாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
* ‘வணங்கான்’ பட ஸ்கிரிப்ட்டை இப்போது பக்காவாக சரி செய்துவிட்டாராம் இயக்குநர் பாலா. அதற்காகத் திருவண்ணாமலை சென்று பத்து நாள்கள் வரை அங்கிருந்து செதுக்கிக் கொண்டு வந்திருக்கிறார். இந்திப் பட வேலையாக மும்பை போயிருக்கிற சூர்யா, சென்னை வந்தபின் பாலா ஷூட்டிங் ஆரம்பமாகி விடும் என்கிறார்கள். ஒரே ஷெட்யூலில் ஷூட்டிங்கை முடித்துவிட முடியுமா என்றும் யோசித்து வருகிறார்கள். அதற்குரிய விதத்திலேயே திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்த ஆண்டுக்குள்ளேயே படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்த வருடம் சிவா படத்தில் இறங்க முடிவு செய்துவிட்டார் சூர்யா. அடுத்ததாக இயக்குநர் ஹரிக்கு என்ன விதத்தில் நன்றிக் கடனைச் செலுத்தலாம் என்றும் யோசித்து வருகிறார். முன்பு ஹரியோடு ஆரம்பிக்க இருந்த படத்திற்கு அவருக்குக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை இன்னும் திரும்பி வாங்காமல் வைத்திருப்பதும் இதற்காகத்தானாம்.
* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை அனுமதிக்கப்பட்டபோது இருந்ததைவிடத் தெளிவாகி இருக்கிறது. அவருக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவருக்கு மருத்துவச் செலவுகள் கூடுதலாக ஆகின்றன. அதற்கேற்ற மாதிரி செலவழிக்க குடும்பத்தில் யாரும் இல்லை. அவரது மொத்த மருத்துவச் செலவுகளையும் முன்னாள் எம்.பி ஏ.சி.சண்முகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். சிகிச்சைக்குப் பின் இன்னும் சில நாள்களில் திரும்பி விடுவார் என்கிறார்கள். அதற்குப் பிறகு அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு அவரது உடல்நிலை உடனடியாக அனுமதிக்காது என்று சொல்கிறார்கள். எப்படியும் அவர் 50 நாள்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்கிறார்கள்.