சிறுகச் சிறுக சேர்க்கும் பணம்; உயரும் வாழ்வாதாரம்… மாற்றம் தந்த மகளிர் சுயஉதவிக் குழு!

குடும்ப தலைவிகளுக்கு அவசர நேரத்தில் கடன் வழங்கி உதவிக்கரம் நீட்டுகிறது “மகளிர் சுய உதவிக் குழுக்கள்”. அத்துடன் பெண்களுக்கான சேமிப்பு பெட்டகமாகவும் உள்ளது. பைனான்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களிடம் பணம் வாங்கும் போது வட்டியின் தொகை அதிகமாகிறது.

சேமிப்பு

ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து சேமிக்கும் பணத்தை கடனாக குழுவில் இருந்து பெறும்போது வட்டி விகிதம் மிகவும் குறைவாகவும் பயனுள்ளதாகவும் அவர்களுக்கு இருப்பதால், மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் உள்ளடக்கிய தோக்கியம் கிராமத்தில் இயங்கிவரும் `செம்மொழி மகளிர் மன்றம்’ மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள உறுப்பினர்களை சந்தித்து பேசினோம். எதற்காக இந்த இந்த குழுவை ஆரம்பித்துள்ளீர்கள்? இதனால் எந்த வகையில் பயன்பெறுகிறீர்கள் என்று கேட்டோம். அவர்கள் கூறியதாவது:

அவசர பணத் தேவைக்கு ஒருவரையும் எதிர்ப்பார்க்க முடியாது. கணவனாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர்களிடம் அடிக்கடி சென்று குடும்ப செலவுகளுக்கோ, தங்களது தேவைகளை பூர்த்தி செய்யவும், மருத்துவ செலவுகளுக்கோ பணம் கேட்கும்போது அவர்களிடம் பணம் இல்லாமலோ, இல்லை அடிக்கடி பணம் கேட்கிறார்கள் என்றோ வெறுப்பாக பேசுகின்றனர். இது குடும்ப தலைவிகளுக்கு உள்ள பிரச்னையாகும்.

பணம்

அதுமட்டுமல்லாமல் சிலர் குடும்பங்களில் கணவன் வேலைக்கு செல்வதில்லை அப்போது மனைவிதான் வேலைக்கு சென்று அந்த குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் பெண்கள் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிலேயே சேமிப்பது என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதனால் மகளிரெல்லாம் சேர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினை தொடங்கியுள்ளோம் என்றார்கள். மேலும் தொடர்ந்து பேசினோம்.

குழு எப்படி செயல்படுகிறது ?

அனைவரும் சேர்ந்து தலைவி மற்றும் உபதலைவியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு குழுவில் 12 முதல் 20 வரை மகளிர் உறுப்பினராக சேரலாம். ஆரம்பத்தில் மாதத்திற்கு நான்கு முறை குழு கூடியது. வாரம் ரூபாய் 20 வீதம் மாதத்திற்கு 80 ரூபாய் சேமிக்க கட்டினோம். இன்று மாதத்திற்கு இருமுறை கூட்டம் கூட்டி 15 நாட்களுக்கு 500 ரூபாய் வீதம் மாதத்திற்கு 1000 ரூபாய் சேமிக்கிறோம். இவ்வாறு சேமித்த பணத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை வங்கியில் செலுத்துகின்றனர்.

பணம்

மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பண தேவை ஏற்படும்போது தலைவி வங்கிக்கு சென்று உள்கடனாக பணத்தை உறுப்பினர்கள் முன்னிலையில் தேவையானவர்களுக்கு கொடுப்பார்கள். எடுத்த பணத்தை 10 தவணையில் தவறாமல் கட்டி முடிக்க வேண்டும். குழுவின் சேமிப்பை பொறுத்து வங்கியே குழுக்களுக்கு லோன் கொடுக்கிறது. இப்படி 20 லட்சம் வரை லோன் பெற்றுள்ளோம்.

உள்கடனுக்கு 2 ரூபாய் வீதம் வட்டியும், வங்கி கொடுக்கும் லோன்களுக்கு 1 ரூபாய் வீதம் வட்டியும் செலுத்த வேண்டும். இது மிகவும் குறைவான வட்டியாகும்.‌ திடீரென பணத்தேவை ஏற்படும்போது கந்துவட்டியோ, பைனான்ஸிடமோ பணம் வாங்கி எங்களால் வட்டி கட்ட முடியாது. ஆனால் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் குறைவான வட்டியில் பணம் கடனாகப் பெற முடியும்.

குழுவில் சேமிக்கும் பணம் எப்படி உதவுகிறது..

இந்த பணத்தின் மூலம் பெண் பிள்ளைகளுக்கு நகை வாங்க, பிள்ளைகளை படிக்க வைக்க, விவசாயம் செய்ய, கல்யாண தேவைகளுக்கு, உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனை செல்ல, சிறிய அளவிலான வியாபாரம் செய்ய, இருசக்கர வாகனம் வாங்க, போன்ற பல்வேறு வகையான தேவைகளை இந்த குழு கடன் பூர்த்தி செய்கிறது. இதனால் பெண்களாகிய எங்களின் பொருளாதார நிலையும் வாழ்வாதாரமும் உயர்ந்து வருகிறது.

பணம்

இவர்கள் சிறுக சிறுக சேமித்த இந்த பணமானது 5 வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவரிடமும் அசலும் வட்டியுமாக பிரித்து கொடுக்கப்படுகிறது. மாதம் 1000 ரூபாய் வீதம் 5 வருடங்கள் சேமிக்கும் போது தோராயமாக 60,000 ரூபாய் அசலாகவும், தவறாமல் சேமிப்பு பணம் கட்டும்போது 60,000 ரூபாய் வட்டியும் வருகிறது என்றார்கள்.

சேமிப்பு என்பது நம் வாழ்வில் இருந்துகொண்டே இருக்கும்வரை நம் வாழ்வில் முன்னேற்றம் என்பதும் இருந்து கொண்டேதான் இருக்கும். சிறியதோ பெரியதோ இன்றிலிருந்தே சேமிக்க தொடங்குவோம் நாளைய தேவையை பூர்த்தி செய்ய இன்றே தயாராவோம்!

– தாரணிதேவி. நா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.