மெக்ஸிகோ சிட்டி: இந்திய நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்ஸிகோவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மெக்ஸிகோ சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலையை, ஓம் பிர்லா நேற்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
லத்தீன் அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தருக்கு அமைக்கப்பட்டுள்ள முதல் சிலை இதுவாகும். இச்சிலை மக்களுக்கு, குறிப்பாக இப்பகுதி இளைஞர்களுக்கு, நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான உத்வேக மாக இருக்கும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கூறும்போது, “மனிதகுலத்துக்கு சுவாமிஜியின் அறிவுரைகளும் போதனைகளும் புவியியல் தடைகளையும் நேரத்தையும் தாண்டியவை. அவரது போதனைகள் முழு மனித குலத்துக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இன்று, மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைத்து, அவருக்கு எங்களது பணிவான அஞ்சலிகளை செலுத்துகிறோம்” என்றார்.
இதேபோல் நேற்று முன்தினம் மெக்ஸிகோவின் சாப்பிங்கோ பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் பாண்டுரங்க கன்கோஜேவின் சிலையையும் ஓம் பிர்லா திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்காவின் மிகவும் பழமையான வேளாண் பல்கலைக்கழகமான சாப்பிங்கோ பல்கலை. வளாகத்தையும் அவர் சுற்றிப்பார்த்தார்.