மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிர்பாராமல் மும்பைக்கு அருகே பல்கர் என்னும் இடத்தில் உள்ள சூரியா நதியில் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் இரங்கல்: சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் “சைரஸ் மிஸ்திரியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நம்பிக்கைக்குரிய தொழில் நிறுவனத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
யார் இவர்? – 1965-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரியின் தந்தை பலோன்ஜி மிஸ்திரி டாடா சன்ஸ் பங்குகளை வாங்கினார். 1980 ஆம் ஆண்டு அவர் டாடா சன்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு அவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2004-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்ந்தார். 2012-ம் ஆண்டில் அவர் டாடா சன்ஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செயல் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதையடுத்து டாடா சன்ஸ் இயக்குநர் குழுவின் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தேசிய சட்ட வாரியத்தை (என்சிஎல்டி) அணுகிய மிஸ்திரிக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். தீர்ப்பாயம், `மிஸ்திரியை நீக்கியது செல்லாது’ என அறிவித்தது. எனினும், அவர் அவர் மீண்டும் தலைவராக விரும்பாமல் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.