"மோடி ஆட்சியில் நாட்டில் வெறுப்பும் பிரிவினைவாதமும் அதிகரித்துவிட்டது" – ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் வெறுப்பும், பிரிவினைவாதமும் அதிகரித்துவிட்டது என டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
image
விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய பேரணி இன்று நடைபெற்றது. இந்தப்பேரணியில் கலந்து கொள்வதற்காக டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்காக ராம்லீலா மைதானத்தை சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டது.
மேலும் பேரணிக்காக ராம்லீலா மைதானத்தை சுற்றிலும், காங்கிரஸ் தலைமை அலுவலகம், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் இல்லங்களை சுற்றிலும் மற்றும் முக்கிய சாலைகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள், பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தது.
அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் கால்நடையாக கைகளில் காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு ராம்லீலா மைதானத்துக்கு வந்தனர்.
image
தனது இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி, இன்று காலை 11 மணியளவில் தனது இல்லம் திரும்பிய நிலையில் மதியம் ஒரு மணியளவில் ராம்லீலா மைதானத்தை வந்தடைந்தார். மைதானத்துக்கு வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், ப.சிதம்பரம், ஆதிரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
image
மேலும் வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கான முன்னோட்டக்கமாக பார்க்கப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து காரசாரமாக உரையாற்றினார்.
ராகுல் காந்தி பேசுகையில், ”பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெறுப்பும், பிரிவினைவாதமும் நாட்டில் அதிகரித்துள்ளன. பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் இரண்டு பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயனளித்து வருகின்றன. அவர் தனது நண்பர்களுக்கு சம்பாதித்து தருவதற்காக ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார். ஆனால் மக்களோ விலைவாசி உயர்வால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.
image
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். இரண்டும் பயம் மற்றும் வெறுப்பு மூலம் மக்களை நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். இந்த பயத்தால் யாருக்கு லாபம்?, நரேந்திர மோடி அரசால் ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஏதாவது பலன் பெறுகிறார்களா?, இரண்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே பலன் பெறுகிறார்கள். இரு தொழிலதிபர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் பா.ஜ.க. அரசு கொடுத்து வருகிறது.
மத்திய அரசால் 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்காக இல்லை, இரு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மட்டும் தான் கொண்டு வரப்பட்டது. அப்படி இருந்தபோதும் விவசாயிகள் சாலையில் வந்து தங்கள் சக்தி என்ன என்பதை மோடிக்கு காட்டிவிட்டனர். தொடர்ந்து நாட்டின் முதுகெலும்பான சிறு, குறு நிறுவனங்களுக்கு பிரதமர் ஜி.எஸ்.டி. மூலம் மூடுவிழா நடத்தி விட்டார். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. பயனடைந்து வரும் இரு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் வேலைவாய்ப்பையும் வழங்க போவதில்லை.
image
அதுமட்டுமல்லாமல், கங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு இப்போது போல் இருந்ததில்லை. தற்போது பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைகளுக்கும், மக்களின் அவதிகளுக்கும் பிரதமர் மட்டுமே பொறுப்பு. மேலும் பணவீக்கத்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். அதை ராஜா (பிரதமர்) கேட்டுத்தான் ஆக வேண்டும்” என்றார்.
மேலும், காங்கிரஸ் எழுச்சி காண காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை நடைப்பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.
இன்றைய பொதுக்கூட்டத்தில் அதிகளவு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் திரண்டது காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் காணப்பட்டது. இதற்கு போட்டியாக விரைவில் தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் பொதுக் கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வும் திட்டமிட்டு இருக்கிறது.
– விக்னேஷ்முத்து.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.