டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கடந்த புதன்கிழமை இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் சனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று அந்நிறுவனம் கூறியது.
பிரிட்டனை மையமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் இந்ததாக்குதலை உறுதி செய்துள்ளது. விமான ஓடுதளம் மற்றும் கிடங்குளை குறிவைத்து 4 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சிரியா மீது நூற்றுக்கணக்கான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.