ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணி – லட்சுமி. இவர்களின் மகன் திருமால்பிரசாத். 28 வயதாகும் இந்த இளைஞர் ஜெர்மனி நாட்டில் வேலைசெய்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஐதராபாத்தில் உள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, நைஜீரிய நாட்டுக்கு பணி நிமித்தமாக அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அந்த நாட்டிலுள்ள லாகோஸ் நகரைச் சேர்ந்த 25 வயதாகும் பட்ரிசியா இஃயின் எஜே என்ற இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். அந்தப் பெண், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை தொடர்பான பட்டம் பெற்றவர்.
பட்ரிசியாவின் அன்பு, மூச்சுக்காற்றாய் இதயத்தை உரசியதால், திருமால் பிரசாத் ஒருநாள் அவரிடம் சென்று மனம் திறந்து தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். பட்ரிசியாவுக்கும் திருமால்பிரசாத்தைப் பிடித்துப் போனது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் அளவுக்கு காதலித்து வந்தனர். இந்த நிலையில், ஜெர்மனி நாட்டில் பணிபுரிவதற்காக திருமால்பிரசாத் சென்றுவிட்டார். ஆனாலும், அவர்களுக்கு இடையேயான காதலும், அன்பும் கொஞ்சம்கூட குறையவில்லை. திருமணம் செய்து கொண்டு இணைந்து வாழ முடிவெடுத்த இருவரும், அது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி புரிய வைத்தனர்.
பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே, இந்து முறைப்படி அவர்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகள் மாப்பிள்ளை திருமால்பிரசாத்தின் சொந்த ஊரான வாலாஜாபேட்டையில் நடைபெற்றன. நல்ல நேரம் பார்த்து, பத்திரிகை அடித்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுத்தனர். உறவினர்கள், நண்பர்கள் மலர்தூவி ஆசீர்வதிக்க, வாலாஜாபேட்டை அல்லிக்குளம் பகுதியிலிருக்கும் திருமண மண்டபத்தில், அவர்களின் திருமணம் கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. கைகளில் மெஹந்தி, வளையல்கள் அலங்கரிக்க புடவை உடுத்தி மணமேடையில் அமர்ந்த பட்ரிசியாவின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டி மணமாலை சூடினார் திருமால்பிரசாத்.
கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும் மலர்தூவி இருவரையும் வாழ்த்தினர். மணக்கோலத்திலிருந்த பட்ரிசியாவைப் பார்த்து, ‘தமிழ்நாட்டின் மருமகளே’ என்று அவரை வரவேற்று மகிழ்வித்தனர். இதையடுத்து, வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
கண்டம் விட்டு கண்டம் கடந்த காதல் மணவறை வரை வந்த ஆச்சர்யம் குறித்து புதுமாப்பிள்ளை திருமால்பிரசாத்திடம் பேசினோம். ‘‘4 ஆண்டுகளுக்கு முன்பு மன அறையில் தொடங்கிய எங்களின் காதல் இன்று மணவறையில் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ரிசியாவிடம் நான் தான் முதலில் காதலை தெரிவித்தேன். நான் காதலிக்கும்போதே பட்ரிசியாவிடம் என் பெற்றோரும், என் அக்காவும் வீடியோ காலில் பேசுவார்கள். தமிழ் கற்றுக்கொடுத்து வருகிறேன். புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் மொழியை பேசவும், படிக்கவும் கற்று கொண்டார். இந்தியா, நைஜீரியா, ஜெர்மனி என இனியும் எங்கள் காதல் உலகம் முழுக்க வட்டமடித்துக்கொண்டே இருக்கும்’’ என்றார் ஆனந்தத்தோடு!