தேனியில் அதிமுக பிரமுகரின் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான அவரது ஓட்டுநர் மற்றும் உறவினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.20 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். அங்கு குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நடத்திவரும் இவர், அதிமுகவின் இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளரான ஓ.பி.எஸ் ஆதரவாளர்களில் ஒருவர். இவரிடம் கார் ஒட்டுநராக பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீதர் கார் ஓட்ட உசிலம்பட்டியில் இருந்து நாராயணன் அவரது காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் ஆண்டிபட்டியில் நாராயணன் தனது காரைவிட்டு இறங்கி அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் காரில் ஏறிக்கொண்டு, பின்னர் தனது ஒட்டுநர் ஸ்ரீதரிடம் காரில் உள்ள 50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகானின் காரில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காரை நாராயணன் வீட்டில் நிறுத்திய ஓட்டுநர் ஸ்ரீதர் நாராயணன் வீட்டில் ஒப்படைக்கக் கூறிய 50 லட்சம் பணத்துடன் தப்பி ஒடி தலைமறைவாகி விட்டதாக நாராயணன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தனது கணவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கார் ஓட்டுநர் ஸ்ரீதரின் மனைவி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வடகரை காவல்துறையினரும் 50 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமான கார் ஓட்டுனரை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு 50 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமான கார் ஓட்டுநரை தேடி வந்த நிலையில் தென்காசி பகுதியில் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்து அவரை பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கார் ஓட்டுநர் ஸ்ரீதரின் உறவினரான மற்றொரு ஸ்ரீதர் என்பவரின் மாமனார் வீடு மற்றும் அவரது வீடு, கடை உள்ளிட்ட மூன்று இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் கார் ஓட்டுநர் ஸ்ரீதரின் உறவினரான மற்றொரு ஸ்ரீதர் என்பவரின் வீடு மற்றும் கடைகளில் இருந்து கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 20 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் உறவினரான ஸ்ரீதர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீதமுள்ள 30 லட்சம் ரூபாய் மீட்பதற்காக காவல்துறையினர் இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM