ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடனான கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும் என பாஜக தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் (NPP) தேசிய மாநாட்டில், எதிர் வரும் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லையென அக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா கூறியிருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், கட்சியின் மேகாலயா பொறுப்பாளருமான எம். சுபா ஆவோ, “ஒரு மாதத்திற்குள் ஆளும் NPP கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி
மேகாலயாவில் தற்போது தேசிய மக்கள் கட்சியின் (NPP) தலைமையின் கீழ் மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியுடன் 6 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. பாஜக சார்பில் இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். கடந்த 2018ல் நடைபெற்ற அம்மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் காங்கிரசுக்கு அடுத்த இடத்தைதான் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
கூட்டணியிலிருந்து விலகல்?
மாநிலத்தில் இரு கட்சிக்கு இடையேயும் மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் (NPP) தேசிய மாநாட்டில், எதிர் வரும் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லையென அக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக, NPP கட்சியுடனான கூட்டணி நீடிக்குமா இல்லையா என ஒரு மாதத்தில் முடிவு செய்யப்படும் என பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், கட்சியின் மேகாலயா பொறுப்பாளருமான எம். சுபா ஆவோ கூறியுள்ளார்.
கைது
இது குறித்து கட்சியின் பல்வேறு மட்டங்களில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், மாநில அரசு மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை கட்சி ஆய்வு செய்து வருவதாகவும், அனைத்து ஆவணங்களையும் திரட்டிய பின்னர் சிபிஐக்கு புகார் அளிக்கும் எனவும் சுபா ஆவோ கூறியுள்ளார். இந்த மோதல் போக்கு பாஜகவின் அம்மாநில துணைத் தலைவரான பெர்னார்ட் என். மராக் கைது செய்யப்பட்டதிலிருந்து தீவிரமடைந்துள்ளது.
ஆர்ப்பாட்டம்
பெர்னார்ட் என். மராக், தனது பண்ணை வீட்டில் விபச்சாரம் செய்ததாக ஜூலை 25ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், மராக் வழக்கில் நியாயமான விசாரணையை கோரி துராவில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மேற்கு கரோ ஹில்ஸில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட துணை ஆணையரை நீக்கக் கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி இருந்தனர்.
விமர்சனம்
மேலும் இந்த பண்ணை வீடு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் சட்டமன்ற தேர்தல் நடைபெற 6 மாதங்களே உள்ள நிலையில் மாரக் மீது எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தவே அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கெனவே இரு கட்சிகளுக்கிடையே இருந்த உரசல்கள் தற்போது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதன் விளைவே பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், கட்சியின் மேகாலயா பொறுப்பாளருமான எம். சுபா ஆவோவின் பேட்டி என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.