இஸ்லாமாபாத்: லண்டனில் திருடப்பட்ட உயர் ரக கார் ஒன்று பாகிஸ்தானின் கராச்சியில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ரூ.2.39 கோடி மதிப்பு கொண்ட இந்த கார், உலகின் மிகவும் பிரபலமான பென்ட்லி முல்சேன் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பாகும்.
இந்த கார் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஓர் ஆடம்பர பங்களாவிலிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
பென்ட்லி முல்சேன்
பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் தலைசிறந்த கார்களை 201-2020 வரை உற்பத்தி செய்தது. அதன் பின்னர் தனது உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. எனவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உலகம் முழுவதும் இந்த கார்கள் தற்போது உள்ளன. இதுவே இதன் மவுசை அதிகரிக்க முக்கிய காரணமாகும். அதிலும் குறிப்பாக பென்ட்லி முல்சேன் ரகம் மிகவும் விலையுயர்ந்ததாகும். இந்த வகை கார்கள் முழுக்க முழுக்க கைகளாலேயே வடிவமைக்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.2.39 கோடியாக உள்ளது.
லண்டன் டூ கராச்சி
இவ்வளவு சிறப்புவாய்ந்த கார் ஒன்று சமீபத்தில் லண்டனிலிருந்து திருடுபோன நிலையில் அது தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இந்த கார் லண்டனிலிருந்து திருடு போயுள்ளது. விசாரித்ததில் கிழக்கு ஐரோப்பிய நாட்டின் உயர் தூதர் ஒருவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு காரை இறக்குமதி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் சோதனையை தீவிரமாக மேற்கொண்டிருந்தனர்.
தேடுதல்
ஆனால் எங்கு தேடியும் கார் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அதிகாரிகள் காத்திருந்தனர். ஏனெனில் கார் நிச்சயம் வீட்டின் உள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதில்லை. எப்படியாயினும் வெளியில் கொண்டுவந்துதான் ஆக வேண்டும். எனவே அதிகாரிகள் காத்திருந்தனர். அப்போது அதிகாரிகளுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. கராச்சியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் சொகுசு கார் ஒன்று இருக்கிறது என்பதுதான் அந்த தகவல்.
தகவல்
உடனே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பங்களாவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி கார் பங்களாவில் இருந்துள்ளது. அந்த காரின் உரிமையாளர் என்று சொல்லப்படுபவரிடத்தில் அதிகாரிகள் ஆவணங்களை பெற்று சோதனை செய்ததில் கார் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காரை வாங்கியவரையும், விற்றவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பறிமுதல்
திருடப்பட்ட கார் கடத்தப்பட்டதன் மூலம் பாகிஸ்தான் நாட்டு ரூபாயில் 300 மில்லியன் அதிகமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பங்களாவுக்கு அடுத்த பங்களாவில் உரிமம் இல்லாத ஆயுதங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனில் திருடப்பட்ட கார் ஒன்று பாகிஸ்தானில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் சொகுசு கார் வைத்திருப்பவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.