2015 முதல் 2022 வரை உள்ள காலகட்டத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்க தேர்வுக்குழு அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த், நாசர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி, சங்கீதா, இயக்குனர் சமுத்திரகனி, லிங்குசாமி, பாண்டிராஜ், வசந்தபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுகொண்டனர். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் என 314 பேருக்கு விருதுகள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கப்பட்டது.
2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் என தயாரிப்பாளர்களுக்கு ரூ. 26,25,000/- காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008 – 2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013 – 2014 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 1,50,000/- காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது மலையன் படத்திற்காக கரண் பெற்று கொண்டார்.
2010 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது இராவணன் படத்திற்காக நடிகர் விக்ரம் பெற்று கொண்டார்.
2011 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது வாகை சூடவா படத்திற்காக நடிகர் விமலுக்கு பதில் அவரது மனைவி பெற்று கொண்டார்
2012 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நீ தான் என் பொன் வசந்தம் படத்திற்காக ஜீவா பெற்று கொண்டார்.
2013 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது ராஜா ராணி படத்திற்காக ஆர்யா பெற்று கொண்டார்.
2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது காவிய தலைவன் படத்திற்காக சித்தார்த் பெற்று கொண்டார்.
2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை விருது காக்கா முட்டை படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்று கொண்டார்.
2014 ஆம் ஆண்டின் சிறந்த கதையசிரியர் விருது சதுரங்க வேட்டை படத்திற்காக ஹெச் வினோத் பெற்று கொண்டார்.
நா முத்துக்குமாருக்கு 3 சிறந்த பாடலாசிரியருக்கான விருது
2012 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது நா முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது.
2013 தங்க மீன்கள் படத்திற்காக நா முத்துக்குமார் அவர்களுக்கு விருது.
நா முத்துக்குமாருக்கு பதிலாக அவரது மகன் விருதினை பெற்றுக் கொண்டார்.
2014 ஆம் ஆண்டு சைவம் படத்திற்கான சிறந்த பாடலாசிரியர் விருது நா முத்துக்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நா முத்துக்குமார் பதில் அவரது மகன் மற்றும் மகள் பெற்று கொண்டனர்.
சிறந்த இயக்குநர்களாக
2009 – வசந்தபாலன் (அங்காடி தேர்வு)
2010 – பிரபு சாலமன் ( மைனா)
2011 – ஏ.எல்.விஜய் (தெய்வ திருமகள்)
2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013 – ராம் (தங்கமீன்கள்)
2014 – ராகவன் (மஞ்சப்பை) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முபெ சாமிநாதன், ’’தமிழ் திரைப்பட விருதுகளை முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் 314 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விருது பட்டியலில் இருந்தவர்கள் 10 பேர் காலமாகியுள்ளனர். இன்று மட்டும் நேரடியாக 240 பேர் விருதுகளை பெற்றுள்ளனர். விருதுகளை கொடுக்க வேண்டியவர்கள் கொடுக்காமல் போய் விட்டார்கள். நாங்கள் அதையும் கொடுத்துள்ளோம். விமர்சனங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். நிச்சயம் 2015 முதல் 2022 வரை திரைப்பட விருதுகள் வழங்க தேர்வுக்குழு அமைக்கப்படும். சென்று சேர வேண்டியவர்களுக்கு நிச்சயம் விருதுகள் சென்றடையும். கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.