விளாத்திகுளம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 4 நாள்களாக பூஜைகள் நடந்து வந்த நிலையில் இன்று விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விளாத்திகுளத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு இந்து அமைப்பினருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து ஊர்வலத்தினை தொடங்கி வைத்தனர். கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் வைக்கப்பட்டு இருந்த 122 விநாயகர் சிலைகள் வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன. 

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. மத நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் வகையிலும், மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து கொடியசைத்து ஊர்வலத்தினை தொடங்கி வைத்தனர். 

இந்த நிகழ்வு அனைவரின் மத்தியில் நெகிழ்வினை ஏற்படுத்தியது. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று கடலில் கரைப்பதற்காக வாகனங்கள் மூலமாக விநாயகர் சிலைகள் வேம்பாருக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவில்பட்டி நகரில் வைக்கப்பட்டு இருந்து 58 விநாயகர் சிலைகள், விளாத்திகுளம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 64 விநாயகர் சிலைகள் என 122 சிலைகள் விளாத்திகுளம் டி.எஸ்.பி.பிரகாஷ் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு வேம்பார் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதையொட்டி மாவட்ட எஸ்.பி. பாலாஜிசரவணன் உத்தரவின் பெயரில் வேம்பார் கடற்கரையில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு இஸ்லாமிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.