தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினி. தன்னுடைய ஸ்டைல் நடிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்த ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
ரசிகர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்ததால் ரஜினிக்கு அரசியல் ஆசையும் துளிர்விடத் தொடங்கியது. இதை வெளிப்படுத்தும் விதமாக, ‘எப்போது வருவேன்? எப்படி வருவேன்? என்று தெரியாது. ஆனால், வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்’ என, தனது படங்களில் வசனம் வைத்ததை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே மாபெரும் தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறிய ரஜினி அந்த வெற்றிடத்தை தம்மால் மட்டுமே நிரப்ப முடியும் என பகிரங்கமாக கூறினார்.
இது வேறு லெவலுக்கு உசுப்பிவிட்டதால் தமிழகம் முழுவதும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதையே தனக்கான வரவேற்பாக கருதி கட்சி தொடங்கும் பணியில் ரஜினி தீவிரம் காட்டினார்.
ரஜினியின் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
மேலும், தனது நடிப்பில் அவ்வப்போது வெளியாகும் படங்களை ஓட வைக்க ரசிகர்களை தூண்டி விடும் யுக்தியை ரஜினி கையாளுவதாக, சரமாரி குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக்கும் வகையில் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினி அரசியல் பயணத்தை கைவிடுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் டென்ஷன் ஆன ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விரும்பிய கட்சிகளில் ஐக்கியமாகினர். இதை எல்லாம் பொருட்படுத்தாத ரஜினி வழக்கம்போல இமயமலை சென்று தியானத்தில் இறங்கினார்.
இதன் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து பிரதமர் மோடியும், ரஜினியும் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியது பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அடுத்து வந்த நாட்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினி சந்தித்ததும், இருவரும் அரசியல் பேசினோம் என ரஜினி கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவரது சகோதரர் சத்திய நாராயணராவ் அதை உறுதி செய்யும் வகையில் கூறியிருக்கும் தகவல் மீண்டும் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது.
அதாவது சென்னை வியாசர்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை தொடங்கி வைத்த சத்திய நாராயணராவ், ‘நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகள் முடிந்ததும் ரசிகர்களை சந்திப்பார்.
இந்த சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அமைய வாய்ப்பு உள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம்தான் உள்ளது’ என ஒரே போடாக போட்டுள்ளார்.
இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதெல்லாம் பொய். சமீபகாலமாக தலைவர் படங்கள் பெரிய அளவில் போகவில்லை.
அதே சமயம் தலைவருக்கு போட்டி நடிகரான கமலின் விக்ரம் படம் வசூலை வாரி குவித்துள்ளது. எனவே விக்ரம் வசூலை முறியடிக்க தலைவர் போடும் ப்ளான் தான் அரசியல் சப்ஜெக்ட்.
தலைவர் படம் பார்க்கிறதோட சரி. நாங்களே இப்பவெல்லாம் அவரை நம்புறது இல்லை. அவரை நீங்களும் நம்பாதீங்க ப்ரோ. உச்சத்தில் அமரவைத்து அழகு பார்த்த எங்களையே ஏமாத்துறார். நீங்களெல்லாம் எம்மாத்திரம்?’ என நமக்கே ரஜினி ரசிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ரஜினி முகத்திரையை கிழிக்கும் விதமாகவே உள்ளது.