புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியை ஒன்றிய தொழிற்பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது இதில் அவசியமற்ற சில பணியிடங்களில் இருந்து சிஐஎஸ்எப் வீரர்களை நீக்க கடந்த 2018-19ம் ஆண்டிற்கான செயல் திட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, உள்நாட்டு விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான பிசிஏஎஸ் தயாரித்துள்ள திட்ட அறிக்கையில், நாடு முழுவதும் 65 விமான நிலையங்களில் இருந்து முக்கியமில்லாத 3,049 பணியிடங்களில் இருந்து சிஐஎஸ்எப் வீரர்களை நீக்க முடிவு செய்துள்ளது.
அவர்களுக்கு பதிலாக 1,924 தனியார் பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை உருவாக்கவும், எஞ்சிய இடங்களில் சிசிடிவி கேமரா போன்ற கண்காணிப்பு தொழில்நுட்ப சாதனங்களையும் அமைக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பயணிகளை சோதனை செய்தல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை போன்ற முக்கியமான பணிகளை சிஐஎஸ்எப் வீரர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள். அதே சமயம் முக்கியமில்லாத பணிகளில் இருந்து வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். பணியிலிருந்து விலக்கப்படும் 3,049 வீரர்கள் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களுக்கும், புதிய விமான நிலையப் பகுதிகளுக்கும் பயன்படுத்தப்படுவார்கள்’ என்கின்றனர்.