லாகூர்,
பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் பெருவெள்ளம் ஏற்பட்டு அந்நாடு நீரில் தத்தளித்து வருகிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சிந்த் மாகாண சுகாதார மந்திரி ஆஜிரா பெச்சுகோ சில புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளார். இதன்படி, வெள்ளத்திற்கு பின்பு, லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அவர் தெரிவித்து உள்ளார்.
ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியமைப்பு ஆகஸ்டு 30-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 6.5 லட்சம் கர்ப்பிணிகள் உள்ள அந்நாட்டில், 73 ஆயிரம் பேர் இந்த மாதத்தில் பிரசவிக்க கூடும் என தெரிவித்து இருந்தது. இதனால், தாய்மைகால சுகாதார சேவைகள் தேவைப்படுபவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்தோரில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும் மற்றும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் பெச்சுகோ தெரிவித்து உள்ளார்.