துபாய்,
ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் 18-வது ஓவரை ரவி பிஸ்மானி வீசினார். அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார். அப்போது, ரவி பிஸ்மானி வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார்.
அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது. அங்கு நின்றுகொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார். ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். அந்த கேட்ச் தவறவிடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டது குறித்து கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கோலி, இது பெரிய போட்டி, சூழ்நிலைகளும் சற்று இறுக்கமாக இருந்தது. அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்கள் உங்களிடம் வருவார்கள்.. நீங்கள் (இளம் வீரர்கள்) அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும்’ என்றார்.