உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிடம் அடைக்கலம் கோரும் நித்யானந்தா

கொழும்பு: உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நித்யானந்தா (44) சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அடைக்கலம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்திவந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளை ஆசிரமங்களையும் நடத்தி வந்தார்.கடந்த 2010-ம் ஆண்டு அவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டது. மேலும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாக அந்த மாநில போலீஸார் கடந்த 2019-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தனர். இரு வழக்குகளிலும் அவரை கைது செய்ய குஜராத், கர்நாடக நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். புதிதாக குடியேறிய தீவுக்கு கைலாசா என்று பெயரிட்டுள்ளார். ஆனால் கைலாசா எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் பரவியது. அதற்கு சமூக வலைதளம் வாயிலாக மறுப்பு தெரிவித்தார். அண்மைக் காலமாக சிறுநீரக பிரச்சினையால் நித்யானந்தா அவதியுற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் கைலாசாவின் வெளியுறவு அமைச்சர் என்ற பெயரில் நித்யபிரேமாத்ம ஆனந்த சுவாமி என்பவர் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:

நித்யானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிக்சை அளிக்க வேண்டி உள்ளது.கைலாசாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் அளிக்க வேண்டுகிறோம். விமான ஆம்புலன்ஸ் மூலம் அவரை இலங்கைக்கு அழைத்துவர தயாராக உள்ளோம். அவரது சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும், மருத்துவ உபகரணங்களுக்கான செலவுகளையும் கைலாசா முழுமையாக ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மறுப்பு

இலங்கை அரசின் ஊடகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, “நித்யானந்தாவிடம் இருந்துஇலங்கை அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை. ஒரு நாட்டில் அடைக்கலம் கோர வேண்டும் என்றால் அந்த நாட்டின் ஐ.நா. சபை அலுவலகம் வாயிலாகவே தொடர்பு கொள்ள வேண்டும்” என்றார்

இதுகுறித்து இலங்கை அரசு சார்பில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.