சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் மூலம் தமிழகம் ஆன்மிக பூமி என்பது நிரூபணமாகியுள்ளதாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி பெருவிழா மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பேசியதாவது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் மூலம், தமிழகத்தில் இந்துத்துவா எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பது தெரியவரும். தமிழகம் ஆன்மிக பூமி. அதை நிரூபிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் எழுச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். 2026-ல்தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் ஜி.கார்த்திகேயன் பேசும் போது, ‘‘திராவிடம் என்ற பெயரால், தமிழை வளர்ப்பதைவிட அதிகமாக அழித்து வருகின்றனர். நமதுமுன்னோர்கள் அறிவார்ந்தவர்களாக விளங்கி வந்தனர். ஆனால், அவர்களுடைய திறன் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு அழிக்கப்பட்டு வருகிறது. தெய்வ நம்பிக்கை, இந்து தர்மம், சனாதன தர்மம்தான் இந்தியர்களை ஒன்றாக, ஒற்றுமையாக வைத்துள்ளது. வருங்காலத்தில் உலக நாடுகளுக்கு தலைமையேற்கும் வல்லரசாக இந்தியா ஒளிரப் போகிறது’’ என்றார்.
இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் நா. முருகானந்தம், ஸ்ரீலஸ்ரீ வாதவூர் அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.