“மத்திய நிதி அமைச்சர் கலெக்டரை மிரட்டுவது மரபு அல்ல" – கே.எஸ்.அழகிரி ஆவேசம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் ‘பாரத் ஜோடோ யாத்திரா’ என்ற பெயரில் 150 நாள்கள் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் இருந்து வரும் 7-ம் தேதி ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார். ராகுல் காந்தி நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கூட்டம் முடிந்த பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய நிதி அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு சென்று ஒரு மாவட்ட ஆட்சியரை நேருக்கு நேர் மிரட்டுவது என்பது மரபு அல்ல. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை. அந்த விஷயத்தில் முதலமைச்சர் பதில் சொல்லியிருந்தால் பிரச்னை வேறு மாதிரி திரும்பியிருக்கும். சுதந்திரத்திற்கு முன்பு இந்த நாட்டில் தீண்டாமை, சமூக நீதி ஏற்றத்தாழ்வு, வறுமை, சாதி வேறுபாடு என பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தது. அதையெல்லாம் கடந்து மகாத்மா காந்தி சுதந்திரம் என்ற ஒரு போர்வையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார்.

சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த நிலைமையை போன்று ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ராகுல் காந்தி சமூக புரட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்த இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொள்கிறார்.

மத்திய அரசு எதையும் ஜனநாயக ரீதியாக பார்ப்பதில்லை. கூட்டாட்சி தத்துவத்தையும் அவர்கள் நோக்குவதில்லை. அவர்கள் தனிப்பட்ட ஒரு விதத்தில் இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-சினுடைய நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பான உணர்வு ஏற்பட்டுள்ளது. தேசத்தின் இறையாண்மையை காக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளார்.

ராகுல் காந்தி நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்ட கே.எஸ்.அழகிரி

ஜி.எஸ்.டி-யில் குறைந்த நிதியை ஈடு செய்வதாக மத்திய அரசு சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் கறுப்பு பணமும் கைப்பற்றப்படவில்லை,15 ரூபாய் கூட போடப்படவில்லை. ஆனால், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பொது மக்களுக்கு தெரியப்படுத்தவே ராகுல் காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி பேரணி மேற்கொள்கிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.