புதுடெல்லி: கூகுள் நிறுவனம் இந்திய பயனாளர்களிடமிருந்து பெற்ற புகார் கடந்தஜூலை மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் பயனாளர்களிடமிருந்து கூகுள் 37,173 புகார்களை பெற்றது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.6% அதிகம்.
இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 6,89,457 மோசமான பதிவுகளை வலைதளத்திலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. பயனாளர்களிடமிருந்து கூகுள் பெற்ற பெரும்பாலான புகார்கள் பதிப்புரிமை மீறல் தொடர்பானவை.
பதிப்புரிமை சட்டவிதிகள் மீறப்பட்டது தொடர்பாக மட்டும் கூகுளுக்கு ஜூலையில் 35,351 புகார்கள் பயனாளர்களிடமிருந்து வந்துள்ளது. இதர புகார்கள் அனைத்தும், வர்த்தக முத்திரை, நீதிமன்ற உத்தரவு, கிராபிக் பாலியல் பதிவுகள் உள்ளிட்டவை தொடர்பானவை.
சிறார் பாலியல் துஷ்பிரயோக பதிவுகள், வன்முறை தீவிரவாத பதிவுகளை ஆன்லைன் வலைதளத்திலிருந்து தானாக கண்டறிந்து நீக்கும் வழிமுறைகளை கூகுள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-ன்படி, கூகுள் உள்ளிட்ட இதர சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது பயனாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.