வாஷிங்டன்: சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள பூமியைவிட பெரிய கிரகத்தை, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் முதல் முறையாக நேரடியாக படம் பிடித்துள்ளனர். நான்கு வெவ்வேறு விதமான ஒளி ஃபில்டர்கள் மூலம் இந்த படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கிரகங்கள் ‘எக்ஸோ பிளானட்’ என அழைக்கப்படுகின்றன. ‘எச்ஐபி65426 பி’ என பெயரிடப்பட்ட சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகத்தை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி மூலம் படம்பிடித்து அதை அமெரிக்காவின் நாசா மையம் வெளியிட்டுள்ளது. இது காணப்படாத பிரபஞ்சத்தை ஆராய, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பிரம்மாண்ட கலைத்திறனை வெளிப்படுத்துகிறது.
‘எச்ஐபி65426 பி’ கிரகம் பூமியைவிட வயது குறைந்தது, ஆனால் அளவில் பெரிதாக உள்ளது. வியாழன் கிரகத்தை விட சுமார் 6 முதல் 12 மடங்கு பெரியது. இதன் வயது சுமார் 1.5 முதல் 2 கோடிஆண்டுகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். விஞ்ஞானிகளின் இந்த கணிப்புகள், கிரகங்களின் அளவு மற்றும் வயதை துல்லியமாக கணக்கிட உதவும் என நாசா கூறுகிறது.
சூரிய குடும்பத்துக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருக்கும், வாயுக்கள் நிரம்பியுள்ள இந்த கிரகங்களை 4 விதமான ஒளி ஃபில்டர்கள் மூலம் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி படம் பிடித்துள்ளது. வானியலில் இது முக்கியமான மாற்றமிக்க தருணம் என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கும்பேராசிரியர் சாஷா ஹின்க்ளே கூறியுள்ளார்.
விண்ணில் நட்சத்திரங்களை விட அதிக கிரகங்கள் உள்ளன என்பதை நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி ஏற்கனவே காட்டியுள்ளது. சூரிய குடும்பத்துக்குள்ளும், அப்பாலும் உள்ள கிரகங்களில் சில நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றன. சில தானாக மிதந்தபடி அண்டத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றன. கிரகங்களில் இரும்பு, கார்பன் தவிர, சிலவற்றில் தண்ணீர் அல்லது பணிக்கட்டி அதிகளவில் இருக்கலாம் என நாசா மதிப்பிட்டுள்ளது.
சூரிய குடும்பத்துக்கு அப்பால் கிரகங்கள் இருப்பது 1990-ம் ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டாலும், அவை தற்போதுதான் நேரடியாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. சூரியகுடும்பத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களை கண்டுபிடிக்க நிழல் முறை, லென்சுகளின் புவியீர்ப்பு மூலம் கண்டறிதல், நேரடியாக படம்பிடிக்கும் முறை என பல வழிகள் உள்ளன. அதில் நேரடியாக படம் பிடிக்கும் முறை சிக்கலானது. ஏனென்றால் கிரகங்களால் சுற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், அந்த கிரகங்களைவிட பல கோடி மடங்கு பிரகாசமானது.
தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ள எச்ஐபி 65426 பி’ கிரகம் அது சுற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை விட 10,000 மடங்குக்கு மேல் மங்கலானது. நட்சத்திரங்களில் இருந்து வெளியேறும் ஒளி, அதனை சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஒளிமற்றும் வெப்ப கதிரியக்கத்தை மிஞ்சிவிடுகிறது. இதனால் இந்த கிரகங்களில் இருந்து வெளிப்படும் பிரதிபலிப்பை படம்பிடிப்பது வானியல் நிபுணர்களுக்கு மிகவும் சிக்கலானதாக உள்ளது. ஆனால், இந்த பிரதிபலிப்பையும் படம் பிடிப்பதில் வெப் தொலை நோக்கி வெற்றிகரமாக செயல்படுகிறது.
‘எச்ஐபி 65426 பி’ கிரகத்தை படம்பிடித்தது பற்றி ஆராய்ச்சிாளர் ஆரின் கார்டர் கூறுகையில், “முதலில் நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. பிறகு ஒளியை கவனமாக நீக்கி, இந்த கிரகத்தை கண்டறிய முடிந்தது. ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியின் லென்சு அமைப்புகள் காரணமாக, இந்த கிரகத்தின் நுண்ணிய பிரதிபலிப்பை படம் பிடிக்க முடிந்தது” என்றார்.