சென்னை : நடிகர் தனுஷ் தன்னுடைய படங்களின் வெற்றிக்காகவும் தன்னுடைய கேரக்டருக்காகவும் மிக அதிகமாக மெனக்கெடுபவர்.
இவருடைய பக்கத்து வீட்டு பையன் லுக் மற்றும் இயல்பான நடிப்பு இவருக்கு எப்போதுமே சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது.
இவரது திருச்சிற்றம்பலம் படம் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் எப்போதுமே தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருபவர். பக்கத்து வீட்டு பையன் போன்ற லுக்கால் ரசிகர்களை அதிகமாக ஈர்த்துவரும் தனுஷ், இந்த இயல்பான லுக்காலேயே அதிகமான படங்களை வெற்றிப் படங்களாக்கியுள்ளார். இவரது வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் லிஸ்டில் உள்ளவை.

அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் போன்ற படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இதையடுத்து தனுஷ் நடிப்பில் எப்போது திரையரங்கில் படங்கள் வெளியாகும் என்ற ஏக்கம் தனுஷிற்கும் அவரது ரசிகர்களுக்கும் இருந்தது.

திரையரங்கில் ரிலீசான திருச்சிற்றம்பலம்
இப்போது இந்தக் குறை நீங்கியுள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி திரையரங்குகளில் இவரது திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் லீட் கதாபாத்திரங்களில் நடித்து தங்களின் நடிப்பால் மிரட்டியிருந்தனர்.

ரூ 100 கோடி கிளப்
மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டவர்களும் சிறப்பான கேரக்டர்களை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக பாரதிராஜாவின் கேரக்டர் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் கடந்த இரு வாரங்களாக திரையரங்குகளில் சிறப்பாக ஓடி 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது.

நானே வருவேன் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய அண்ணன் செல்வராகவனுடன் இணைந்துள்ள நானே வருவேன் படத்தின் பிரமோஷன் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக வரும் 11ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்
படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு வரும் 11ம் தேதி டபுள் ட்ரீட் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நானே வருவேன் -திருச்சிற்றம்பலம்
அன்றைய தினம் நானே வருவேன் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ள நிலையில், அன்றைய தினம் திருச்சிற்றம்பலம் படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தை படக்குழு கொண்டாடவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் இந்த இரட்டை கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ காத்திருக்கின்றனர்.

ட்விட்டரில் ட்ரெண்டிங்
இதனிடையே நானே வருவேன் படம் தொடர்ந்து 56 ட்வீட்ளுடன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. படம் குறித்தும், ட்ரெயிலர், ரிலீஸ் குறித்தும் ரசிகர்கள் தொடர்ந்து யூகங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தங்களது கைவண்ணங்களில் படத்தின் போஸ்டர்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.