புதுடெல்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தேசிய விருதுகளை வழங்குகிறார். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, தனது இல்லத்தில் இன்று மாலை கலந்துரையாடுகிறார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய விருதுகள் வழங்க நாடு முழுவதிலும் இருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு பிரிவின் கீழ் மாற்றுத்திறன் ஆசிரியர்கள் இருவர் உத்தராகண்ட் மற்றும் அந்தமான் மற்றம் நிகோபார் தீவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது மாளிகையில் தேசிய விருதுகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் பிரபா சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஆசிரியர்களின் உறுதி மற்றும் கடின உழைப்பால் பள்ளி கல்வியின் தரம் மட்டும் உயராமல், மாணவர்களின் வாழ்க்கையும் மேம்படுகிறது. நாட்டின் சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பை கொண்டாடவும், கவுரவிக்கவும் ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் வெளிப்படையான தேர்வு முறையில் ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை பள்ளி கல்வித்துறை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு தனது இல்லத்தில் கலந்துரையாடுகிறார். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ