இந்தியா முழுவதுமே, உரிய அரசு அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளப்படுவது சட்டப்படி தண்டனைக்குரியச் செயலாகும். இருப்பினும் மாஃபியா குழுக்கள் மூலம் ஆங்காங்கே சட்டவிரோதமாக ஆற்றுமணல் சூறையாடப்பட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக நாமும் பார்த்துதான் வருகிறோம். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நேற்றிரவு சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 மணல் மாஃபியா ட்ராக்டர்கள், சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்துச் சென்ற சம்பவம் போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆக்ரா குவாலியர் நெடுஞ்சாலையிலுள்ள ஜஜாவ் சுங்கச்சாவடியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், முதலில் மணல் ஏற்றிவந்த ட்ராக்டர் ஒன்று, சுங்கவரி கட்டணத்தைச் செலுத்தாமல், அங்கிருந்த தடுப்பை உடைந்தெறிந்துவிட்டு சென்றிருக்கிறது. அதைத்தொடர்ந்து வந்த மற்ற 12 ட்ராக்டர்களும் தொடர்ச்சியாக வண்டியை நிறுத்தாமல் தடுப்புகளை உடைத்துவிட்டுச் சென்றிருந்தது.
இப்படியாகச் சுங்கச்சாவடி தடுப்புகளை 50 வினாடிகளில், 13 ட்ராக்டர்கள் உடைத்துச் சென்றிருக்கின்றன. மேலும், ட்ராக்டர்கள் சுங்கச்சாவடியில் நிற்காமல் தடுப்புகளை உடைத்துச்சென்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து போலீஸாரும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான்-உத்தரப்பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சட்டவிரோத சுரங்க செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.