அரசு விரைவுப் பேருந்தில் பயணிகளுக்கு 10% ஆஃபர் – முழு விபரம் இதோ

இணையம் மூலம் இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வோருக்கு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அதிநவீன மிதவைப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து, மொத்தம் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 300 கி.மீ.க்கும் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம்ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம், ஒரு மாதத்துக்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

image
இந்நிலையில், பயணிகள் நீண்ட தொலைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், விழா நாட்கள் நீங்கலாக, இதர நாட்களில் இணையவழி மூலமாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தற்போது இந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரே நேரத்தில் ஊருக்குச் சென்று வருவதற்கான பயணச்சீட்டை இணையவழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. விழா நாட்களுக்கு இந்த சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்: நத்தம் அருகே நடந்த சோகம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.