மோடி கொடுத்த அசைன்மெண்ட்: ஸ்பாட்டுக்கு செல்லும் நிர்வாகிகள்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எட்டாண்டுகளை கடந்து பிரதமர் மோடியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 2024 மக்களவை தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். அதன்படி, மக்களவை தேர்தலை மனதில் வைத்து அதற்கான பணிகளை அக்கட்சி இப்போதே தொடங்கி விட்டது.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக, கர்நாடகம், குஜராத், தெலங்கானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. மக்களவை தேர்தலின் முன்னோட்டமாகவும் இந்த ஏழு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பார்க்கப்படுகிறது. எனவே, 7 மாநிலங்களில் குறைந்தது ஐந்து மாநிலங்களிலாவது வெற்றி பெற்று விட வேண்டும், இல்லையென்றால் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலுப்பெற்று விடும் என பாஜக தலைமை கணக்கு போடுவதாக தெரிகிறது.

அந்தவகையில்,மக்களவை தேர்தலையொட்டி பாஜக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி சில அசைன்மெண்ட்டுகளை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மத்திய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகள் அல்லது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து கள நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மக்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மத்திய அமைச்சர்களை பொறுத்தவரை டெல்லியிலேயே தங்கி இருக்காமல் வார இறுதி நாட்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்திக்க வேண்டும். குறிப்பிட்ட மக்களவை தொகுதியில் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பயணிக்க வேண்டும். ஏழைகள், கட்சியின் கிளை கமிட்டி நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று உணவருந்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளதாக தெரிகிறது.

அதன்படியே, மத்திய நிதியமைச்சர் தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்கவில்லை என்று கட்சி நிர்வாகி போன்று பிரசாரம் செய்து விமர்சனத்துக்குள்ளானதும் அதன் விளைவாகவே நடந்தது என்கிறார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தல்படியே மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.