லக்னோ: இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை விரைவுபடுத்த உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.53.73 கோடியை ஒதுக்கியுள்ளதாக சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் டேனிஷ் அன்சாரி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது.
தலித், பிற்படுத்தப்பட்டவர் களை உள்ளடக்கி விளிம்பு நிலையில் உள்ள இஸ்லாமிய மக்களைகண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் முக்கியகனவாக உள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு, இஸ்லாமியர் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றில் உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் திட்டடத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து ரூ.53.73 கோடியை ஒதுக்கியுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஸிபூரில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பெண்களின் பயன்பாட்டுக்கான தங்கும் விடுதிகள், பல்நோக்கு கருத்தரங்கு வளாகங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, தியோரியா, ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வர் பகுதிகளிலும், விடுதி, அரசு ஹோமியோபதி மருத்துவமனை திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இங்கு வசிப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் மேல் சிறுபான்மை இனத்தவர்கள். மொத்தம் 14 திட்டங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப் படவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ராம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கடந்த மக்களவை இடைத்தேர்தலின்போது முகமது ஆஸம்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பிரச்சாரத்துக்கிடையிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. இது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதனை சிறந்த தருணமாக பயன்படுத்தி, இஸ்லாமிய மக்களிடம் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், அடுத்து வரும் தேர்தல்களை மனதில் கொண்டும் சிறுபான்மையினருக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் பாஜக அதிக முனைப்பு காட்டி வருகிறது.