ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு தோனி மட்டுமே தன்னிடம் பேசியதாக தெரிவித்து இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த வாரம் நீண்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த லீக் சுற்று போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
பாகிஸ்தான் வெற்றி
இந்த நிலையில் ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை கடந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
விராட் கோலி பேட்டி
இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, “நான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது தோனி மட்டுமே மெசேஜ் செய்தார். பலரிடம் எனது எண் இருந்தும் தோனியிடமிருந்து மட்டுமே அழைப்பு வந்தது. நமது சில தொடர்புகள் நம்பிக்கைக்கு உரியதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனக்கு யோசனை வழங்க விரும்புவோர் நேர் நேராக வாருங்கள்.” என்றார்.
அதிக எதிர்பார்ப்பு
இந்திய அணியின் நம்பிக்குரிய வீரராக திகழ்ந்து வந்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், லாரா, தோனி, கங்குலி என பல முன்னணி வீரர்கள் படைத்த சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டிருந்தார். விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அனைத்து சாதனைகளையும் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது தலைமையின் கீழ் இந்தியா அதிக போட்டிகளையும் தொடர்களையும் தொடர்ந்து வென்று முன்னேறியது. இன்று வரை அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட இந்திய கேப்டன் கோலிதான்.
எல்லை மீறிய விமர்சனங்கள்
ஆனால், தோனியை போல் ஐசிசி கோப்பைகளையும், பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெறிப்படுத்தினால் 3 ஆண்டுகளாக சதத்தை விளாசாமல் இருந்த கோலியின் பேட்டிங் ஸ்டைல் மீதான விமர்சனங்கள் தொடங்கி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, அவரது குழந்தை வரை விமர்சனங்களை முன்வைத்தார்கள் சிலர்.
அசத்தல் ஆட்டம்
தொடர் அழுத்தங்களின் காரணமாக 3 விதமான கிரிக்கெட் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் விலகிய அவர், அடுத்தடுத்த சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த அவரை அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்று விமர்சித்தார்கள் எதிர்ப்பாளர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும். இதனால் மன அழுத்தத்தில் தான் இருப்பதாகவும் வெளிப்படையாகவே கூறினார் விராட் கோலி.
ஆசிய கோப்பையில் அதிரடி
ஆனால் இதற்கெல்லாம் தக்க பதிலடியை இந்த ஆசிய கோப்பை தொடரில் அளித்து இருக்கிறார் விராட் கோலி. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 35, ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 59, பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 60 என பழைய ஃபாருமுக்கு மீண்டும் வந்து நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என பேட்டால் மிரட்டி இருக்கிறார்.