கம்பத்தில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் வெடிபொருள்கள் விற்பனையை கண்காணிக்க வேண்டும்-சமூகஆர்வலர்கள் கோரிக்கை

கம்பம் : கம்பத்தில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் வெடிமருந்து மற்றும் வெடிபொருட்கள் விற்பனைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் மணல்,மண்,நீர் என அனைத்து இயற்கை வளங்களும் அள்ள அள்ள குறையாமல் மாவட்டத்தில் கொட்டிகிடக்கிறது. மேலும் தேனி மாவட்டத்தில் மட்டும் 150 குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் கேரள பதிவெண் கொண்ட லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கேரளாவில் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை வளங்களை அள்ள தடை விதித்ததால் தேனி மாவட்டத்திலிருந்து தான் அதிகமதிகம் இயற்கை வளமான மண், ஜல்லி, எம் சாண்ட், மற்றும் மணல் அனுமதிபெற்று கொண்டு செல்லப்படுகிறது. இந்த குவாரிகளில் உடைக்கடும் பாறைகளுக்கு வெடி வைக்க முறையாக அரசு அனுமதி பெற்ற ஒருவர் வெடிமருந்து சப்ளை செய்து வருகிறார். அவர் விற்கும் வெடிபொருட்களை உளவுத்துறையும், மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்கிறதா என்பது தான் சமூக ஆர்வலர்களின் முதல் கேள்வி.

2008 ஆம் ஆண்டு வெடி மருந்து  சட்டத்தின்படி வெடி பொருள் கிட்டங்கி அமைக்க மாவட்ட அளவில் மாவட்ட வருவாய்  அலுவலரிடம்  உரிமத்திற்காக மனு செய்ய வேண்டும்.வி.ஏ.ஓ மற்றும் தாசில்தார்  விசாரணை நடத்தி வருவாய் கோட்டாசியருக்கு அறிக்கை தாக்கல்  செய்வார். கோட்டாட்சியர் பரிந்துரைப்படி மாவட்ட வருவாய் அலுவலர் விண்ணப்பித்த  மனு தாரருக்கு வெடி மருந்து விற்பனை உரிமம் வழங்குவார்.அதன்படி  குடியிருப்பு பகுதி ,பள்ளிக்கூடம்,அங்கன் வாடி மையம், மருத்துவமனை, ரிசர்வ்  பாரஸ்ட் ஓடை நிலம் ஆகியவை இருக்க கூடாது. இதற்காக வனத்துறை,பெட்ரோலியத்துறை,  தீயணைப்பு துறையினரிடம் தடை இல்லா சான்று வாங்கி வைத்திருக்க  வேண்டும்.

அதன் பின்  மொத்தமாக விற்கப்படும் டீலர்களிடம் இருந்து மாவட்ட  அளவில் உள்ள  உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு  மட்டுமே வெடி மருந்தினை வாங்க வேண்டும்.அவ்வாறு வாங்கும் வெடி மருந்தினை  யார் யாருக்கு விற்பனை செய்கிறோம் என்பதை தெளிவான ஏட்டில் பதிவு செய்து  பராமரிக்க வேண்டும்.வருடம் ஒரு முறை தங்களது உரிமத்தை புதுப்பிக்கும் போது  ,எத்தனை கிலோ வெடி மருந்து வாங்கப்பட்டது,அதை எந்த எந்த குவாரிகளுக்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை எழுத்து வடிவில் சம்மந்தப்பட்ட துறை  அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் .அதன்பின் தான் புதிதாய்  நடப்பாண்டுக்கு தேவையான வெடி மருந்தினை பெற முடியும். இதில் எந்த குவாரிக்கு  விற்பனை செய்யபட்டது என்ற இடத்தில் தான் முன்னுக்குபின் முரணாக கணக்கை  மாற்றி கள்ளச்சந்தையில் வெடி பொருள் விற்பதாக கூறப்படுகிறது.

தேனி மாவட்டத்தை பொருத்த வரை வெடிபொருட்களை கவனமாக கையாள வேண்டும் என்பதே பொதுவான கருத்து. ஓரிரு நாட்களுக்கு முன் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் முன் பகை காரணமாக காமய கவுண்டன் பட்டியை சேர்ந்த சிவனாண்டி,சங்கிலி, சுருளி, மகேந்திரன் என்ற நான்கு பேர் நாட்டுவெடிகுண்டை ஆறு இடங்களில் வீசி சென்றுள்ளனர். இந்த செயல் மாவட்டம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.போலிசாருக்கு தாங்கள் அளித்த வாக்குமூலத்தில் போடி,தேவாரம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து நாட்டு வெடிக்குண்டு வாங்கியதாக கூறியுள்ளனர்.

சாதாரண விவசாயிகளுக்கே நாட்டு வெடிக்குண்டுகள்,ஜெலட்டின் குச்சிகள் கிடைக்கிறது என்றால்,இதே போல் எத்தனை முறை வெளி மாநிலங்களுக்கு வெடி மருந்துகள் கொண்டு செல்லப்பட்டிருக்கும். வெடிபொருட்களால் ஏற்படும் பேரழிவுகளைத் தடுக்கும் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திற்காக வெடிபொருட்களின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு மற்றும் பிற கையாளுதல்களை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டம் 1950 இல் அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் ஏட்டளவில் இல்லாமல் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கருத்து. எனவே முறையாக வெடிமருந்துகள் விற்பனைகள் குறித்து காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வட்டார அளவில் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி அதில் தலைவராக தாசில்தார் செயல்படுவார். அவருடன் லோக்கல் போலிஸ் இன்ஸ்பெக்டர், கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர்,மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் இருப்பார்கள்.அவர்கள் மாதம் ஒரு முறை கூடி கண்காணித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிப்பார்கள் அதனடிப்படையில் வெடி மருந்து உட்பட அனைத்தும் இதில் இடம் பெறும் அனைத்தும் கண்காணிக்கபடும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.