மும்பை: கடந்த இரு வருடங்களாக பாலிவுட் திரைப்படங்களை விட தமிழ், தெலுங்கு சினிமாக்கள் வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன.
இந்தி படங்களின் தோல்வியால் அதில் நடிக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் மார்க்கெட் வேல்யூ குறைந்து வருகிறது.
இதனால், சரவதேச நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் நடிக்க தென்னிந்திய நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன.
பான் இந்தியா மார்க்கெட்
2015ல் பாகுபலி வெளியாகும் முன்னர் வரை, இந்திய சினிமாவின் வர்த்தகம், அந்தந்த மொழிகளுக்கான மாநிலங்களுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தது. குறிப்பிட்ட மொழிகளில் வெற்றி பெறும் திரைப்படங்கள், மற்ற மொழிகளில் ரீமேக் மட்டுமே செய்யப்பட்டன. உதாரணமாக தமிழில் ரஜினி நடிப்பில் ஒரு படம் வெற்றிப் பெற்றால், அது, இந்தியில் ரீமேக் ஆகும் போது அங்குள்ள முன்னணி நட்சத்திரங்கள் யாரேனும் நடித்தனர். அதேபோல், மற்ற மொழிகளிலும் இதேநிலை தான் காணப்பட்டது. ஆனால், ராஜமெளலி இயக்கிய பாகுபலி ஒரேநேரத்தில் அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகி மெஹா ஹிட் அடித்தது.
ரசிகர்களின் மனநிலையில் மாற்றம்
இந்திய திரையுலகமே எதிர்பார்க்காத பிரம்மாண்டமான வெற்றியை பாகுபலி திரைப்படம் நிகழ்த்திக் காட்டியது. இதனால், அந்தப் படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என பலரும் இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களிடமும் பிரபலமாகினர். குறிப்பாக பாகுபலி ரிலீஸ்க்குப் பின்னர் பிரபாஸ், பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக அடையாளம் காணப்பட்டார். இதனால், முன்பிருந்த ரிமேக் கலாச்சாரம் மெல்ல மெல்ல முடங்கி, பான் இந்தியா போதையில் நடிகர்கள் மயங்கினர்.
பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி
பான் இந்தியா என்ற கலாச்சாரத்தை பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், வர்த்தக ரீதியான சினிமாவில் அது முக்கியமான சொல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், சமீபத்தில் பான் இந்தியா பிராண்டுடன் வெளியான இந்திப் படங்கள் படு தோல்வியடைந்தன. அக்சய் குமார், அமீர்கான், ரன்வீர சிங், ரன்பீர் கபூர் என முன்னணி நடிகர்களே பலத்த அடியோடு சுருண்டு விழுந்தனர்.
அசத்தும் தென்னிந்திய திரைப்படங்கள்
அதேநேரம், தமிழ், தெலுங்கு திரைப்படங்கள், பான் இந்தியா மார்க்கெட்டில் கலக்கி வருகின்றன. அல்லு அர்ஜுனின் புஷ்பா, ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், கமலின் விக்ரம், யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் போன்ற திரைப்படங்கள், கோடிகளை குவித்து வசூலில் சாதனைப் படைத்தன. இதனால், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், யாஷ், துல்கர் சல்மான், சமந்தா, ராஷ்மிகா மந்தனா போன்ற நட்சத்திரங்கள் இந்தியா முழுவதும் பிரபலமானார்கள். தமிழ் நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள் என்ற பாகுபாட்டை மறந்த இந்தி ரசிகர்கள், இந்திய நடிகர்கள் என்று ரசிக்கத் தொடங்கினர்.
சர்வதேச நிறுவனங்களின் முடிவு
பாலிவுட் திரைப்படங்களின் படுதோல்வி ஒருபுறம், தென்னிந்திய படங்கள் சூப்பர் ஹிட்கள் இன்னொரு பக்கம் என, சர்வதேச நிறுவனங்களையும் இது கவனிக்க வைத்தது. முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களில், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் நடிப்பதே வழக்கமாக இருந்தது. இந்நிலையில், இப்போது அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், சமந்தா, ராஷ்மிகா மந்தனா என தென்னிந்திய நடிகர்களை சர்வதேச நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றன.
ரசிகர்களே எங்கள் வாடிக்கையாளர்கள்
Coca-Cola, Frooti, Kingfisher, redBus, McDonald’s, boat போன்ற சர்வதேச நிறுவனங்கள், தென்னிந்திய நடிகர்களை தங்களது விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து வருகின்றன. பாலிவுட் நடிகர்களா அல்லது தென்னிந்திய நடிகர்களா என்பதைக் கடந்து, தங்களது பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைந்தால் போதும் என நினைக்கின்றன. மேலும், பாலிவுட் நட்சத்திரங்களை விட, தென்னிந்திய நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்குவதும் அவர்களுக்கு லாபமாக அமைகிறது. திரைப்படத்துறையை கடந்து இப்போது விளம்பரங்களிலும் தென்னிந்திய திரையுலகம் முன்னேற்றம் அடைந்து வருவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.