ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. கடையை எப்போ திறப்பீங்க! கும்மிடிப்பூண்டியில் சிக்கிய சிரிப்பு திருடர்கள்

கும்மிடிப்பூண்டி: டாஸ்மாக் கடைக்குள் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு நுழைந்து பணத்தை திருடிய கொள்ளையர்கள், அங்கேயே மது அருந்தியதால் போலீஸாரிடம் சிக்கினர்.

ஒரு திரைப்படத்தில் ஒயிஷ் ஷாப்புக்குள் வடிவேலு கொள்ளையடிக்க செல்வார். ஆனால் அவர் இருப்பது தெரியாமலேயே கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விடுவர்.

பின்னர் அங்கு இருக்கும் மதுபானங்களை குடிக்கும் வடிவேலு, போதை தலைக்கேறியதும் கடை உரிமையாளருக்கே ஃபோன் செய்து ‘பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. கடைய எப்ப சார் திறப்பீங்க..’ என கேட்பார். நகரம் முதல் பட்டித்தொட்டி வரை ஹிட் அடித்த இந்த காமெடி காட்சியை போலவே தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு காமெடி திருட்டுச் சம்பவம் நடந்திருக்கிறது.

ஸ்கெட்ச் போட்ட திருடர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தண்டலச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கிராமத்தில் இருக்கும் ஒரே டாஸ்மாக் என்பதால் காலை முதல் இரவு வரை இங்கு மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இதனை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்கள், இங்கு ரிஸ்க் எடுத்து திருடினால் ஒரே நாளில் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என கணக்கு போட்டனர். அதன்படி, கடந்த ஒரு வாரக்காலமாக கடைக்குள் எப்படி நுழைவது என அவர்கள் ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.

 சுவரை துளையிட்டு நுழைந்தனர்

சுவரை துளையிட்டு நுழைந்தனர்

பூட்டை உடைத்து உள்ளே செல்லலாம் என்றால் சத்தம் அதிகம் கேட்டு அருகில் இருப்பவர்கள் அலர்ட்டாகி விடுவார்கள் என்பதால் கடையில் துளை போட்டு உள்ளே நுழைய அவர்கள் முடிவு செய்தனர். இதனால் இரண்டு தினங்களாக நள்ளிரவு நேரத்தில் கடைக்கு பின்னால் சென்று, சிறிது சிறிதாக சுவரை துளையிட்டு யாருக்கும் தெரியாதபடி உடைந்த பகுதியை அங்கேயே வைத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றதும், கொள்ளையர்கள் இருவர் சுமார் 12.30 மணியளவில் கடையின் பின்புறம் துளையிடப்பட்டிருந்த பாகத்தை தள்ளிவிட்டு அதன் வழியாக உள்ளே சென்றனர்.

 மதுவை பார்த்ததும் சபலம்

மதுவை பார்த்ததும் சபலம்

பின்னர் கல்லா பெட்டியின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லட்சக்கணக்கான ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து, கடையில் இருந்து வெளியேறும்போது தான் அவர்களுக்கு சபலம் தட்டி இருக்கிறது. கடைக்குள் விதவிதமான மதுபானங்களை பார்த்த அவர்களுக்கு அதன் மீது ஆசை ஏற்பட்டது. சரி.. வந்ததற்கு சிறிதாவது மதுபானம் அருந்துவிட்டு செல்லலாம் என அவர்கள் முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சாவகாசமாக அமர்ந்து அவர்கள் மது குடிக்க ஆரம்பித்தனர். மது உள்ளே செல்ல செல்ல அவர்கள் தன்னிலை மறக்க தொடங்கினர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மது குடித்த அவர்கள், போதையில் சத்தமாக சிரித்து பேச ஆரம்பித்தனர்.

 அலேக்காக தூக்கிய போலீஸார்

அலேக்காக தூக்கிய போலீஸார்

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ரோந்து போலீஸாருக்கு, பூட்டிய டாஸ்மாக் கடைக்குள் இருந்து பேச்சு சத்தம் வருவது கேட்டது. பின்னர் அந்த கடைக்கு பின்னால் சென்று பார்த்த போது சுவரில் துளையிட்டு திருடர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையின் கதவை தட்டிய போலீஸார், இருவரும் மரியாதையாக துளை வழியாக வெளியே வருமாறு அதட்டினர். போலீஸாரின் சத்தத்தை கேட்டதும் அடித்த போதை எல்லாம் இறங்கிவிடவே, செய்தவறியாது வேறு வழியில்லாமல் துளை வழியாக எலியை போல வெளியே வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தததில், அவர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த சதீஷ் (38) மற்றும் முனியன் (40) என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

டாஸ்மாக் கடைக்குள் சென்று திருடிய கொள்ளையர்கள், மது அருந்தியதால் மாட்டிக் கொண்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.