மும்பை: கார் விபத்தில் சைரஸ் மிஸ்ட்ரி உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாததே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இனி பின்னிருக்கையில் அமர்ந்தால் சீட் பெல்ட் அணிவேன் என்று உறுதிமொழி ஏற்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்வீட் செய்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நேற்று (செப்.4) கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிர்பாராமல் மும்பைக்கு அருகே பல்கர் என்னும் இடத்தில் உள்ள சூரியா நதியில் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்ட்ரி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்த போலீஸார் பால்கர் பகுதியில் உள்ள சரோட்டி சோதனைச் சாவடியை 2.21 மணிக்கு கார் கடந்துள்ளது. விபத்து நடந்த பகுதி அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. விபத்து நடந்த நேரம் சரியாக 2.30 மணி. செக் போஸ்டில் இருந்து கிளம்பிய கார் 9வது நிமிடத்தில் விபத்து நடந்துள்ளது. 20 கி.மீ தூரத்தை கார் வெறும் 9 நிமிடங்களில் கடந்தது தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது சைரஸ் மிஸ்ட்ரி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் ஆனால் சீட் பெல்ட் அணியவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதனை மேற்கோள் காட்டியுள்ள மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா, “நான் காரில் பயணிக்கும்போது பின் இருக்கையில் அமர்ந்தாலும் இனிமேல் தவறாமல் சீட் பெல்ட் அணிவேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன். உங்கள் அனைவருக்கும் இதைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் குடும்பத்திற்காக இதைச் செய்வோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.