போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அதில் முதலமைச்சராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தொடங்கிய உட்கட்சிப்பிரச்சனை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில்போ முடிந்தது. பாஜகவின் ஆபரேசன் தாமரையால் கவிழ்ந்தது மபி காங்கிரஸ் ஆட்சி.
ஆபரேசன் தாமரை
கடந்த 2020 மார்ச் மாதம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. இதனை தொடர்ந்து சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்தது.
பாஜக அரசில் புகைச்சல்
ஜோதிர் ஆதித்யாவும் பாஜகவில் சேர்ந்து மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோடு கட்சியிலிருந்து விலகிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற புகைச்சல் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த புகைச்சல் அதிகமாகி மத்திய பிரதேச பாஜக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
4 பேர் போர்க்கொடி
ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் ஆதரவாளரான 2 அமைச்சர்கள் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஊராட்சி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மகேந்திர சிசோடியா, அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவ் ஆகியோர் அரசுக்கு எதிராகவும் தலைமை செயலாளார் ஐ.எஸ்.பெய்ன்ஸுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக கருத்து
அதேபோல் பாஜக மூத்த தலைவர் சீதாசரண் சர்மா, நிலுவையில் உள்ள மின்கட்டணங்களை திரும்பப்பெறும் அரசு மின்சாரத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மற்றொரு எம்.எல்.ஏ. நாராயண் திரிபாதி, மத்திய பிரதேசத்தில் இருந்து விந்திய பிரதேசத்தை தனி மாநிலமாக பிரிக்க வலியுறுத்தி வருகிறார்.
தனிக்கட்சி
இந்த நிலையில் சித்ரகூட் பகுதியில் சுரங்க பணிகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கே கடிதம் எழுதியுள்ளார். சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் அடுத்து பாஜக என மூன்று கட்சிகளில் இருந்து மைஹார் தொகுதியில் போட்டியிட்ட திரிபாதி விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றம்
இதற்கிடையே அடுத்தமாதம் மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெற இருக்கும் நிலையில் அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி சிசோடியா மற்றும் பிரிஜேந்தர் சிங்கின் அமைச்சர் பதவியை பறிக்க சிவராஜ் சிங் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கருத்து
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுடன் அவரது ஆதரவாளர்கள் கட்சி தாவிய பிறகு பாஜகவில் உட்கட்சிப்பூசல் அதிகரித்து வருவதாக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கே.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் தங்கள் தலைவருடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் விமர்சித்த அவர், வியாபார அரசியல்வாதிகள் என்று சாடினார். 2023 தேர்தலில் அதற்கான விலையை இவர்கள் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.