ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் ஹேமந் சோரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தற்போது இம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாக குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரன் மீது நடவடிக்கை எடுக்க மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்து. இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் என நிலை உருவாகியுள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
இந்த நெருக்கடிக்கு மத்தியில் இன்று மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் சோரன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சட்டப்பேரவையில் சோரனுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோரன், பாஜக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்ததுள்ளார். ஆட்சி கவிழ்ப்பு செய்ய பாஜக முயற்சி செய்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜக
அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை அழித்துவிட்டன. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சட்டப்பேரவையில் எங்கள் பலத்தை நாங்கள் நிரூபிப்போம். உடைகள், ரேஷன், மளிகை பொருட்கள் வாங்குவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பாஜக மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குகிறது.” என நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டப்பேரவையில் சோரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மாநில நிலைமை
இம்மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில், 41 எம்எல்ஏக்களை கொண்டுள்ள கட்சி ஆட்சியமைக்கும். இந்நிலையில், தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு 49 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. இதில் 30 எம்எல்ஏக்கள் முக்தி மோர்ச்சா கட்சியை சார்ந்தவர்கள். 18 பேர் காங்கிரசும், ஒரு எம்எல்ஏ தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர் ஆவார்.
சொகுசு விடுதிகளில் எம்எல்ஏக்கள்
முன்னதாக தேர்தல் ஆணையம் சோரன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்த நிலையில், மாநிலத்தில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பதாக கூறி, 49 எம்எல்ஏக்களையும் வேறு மாநிலத்தில் இருக்கும் சொகுசு விடுதிகளுக்கு சோரன் மாற்றினார். இந்நிலையில் இவர்கள் நேற்று காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மாநில தலைநகர் ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இன்று காலை சட்டப்பேரவைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.