மாஸ்கோ: ஆர்ஐசி முத்தரப்பு ஒத்துழைப்புமூலம் ரஷ்யா, இந்தியா, சீனா இடையே ஸ்திரத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிப்போவ் தெரிவித்தார்.
ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் இடையே பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க ஆர்ஐசிமுத்தரப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ஐசி கூட்டமைப்பின் கீழ், 3 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் முத்தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளை விவாதிக்க அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் 3 நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டெல்லியில் ரஷ்ய தூதர் டெனிஸ் அலிப்போவ் நேற்று கூறியதாவது.
ஆர்ஐசி பிராந்தியத்தில் பரஸ்பரபுரிதல், நம்பிக்கை மற்றும் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதில் ஆர்ஐசி முத்தரப்பு ஒத்துழைப்பு கருவியாக உள்ளது. மேலும் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் அதிகரிக்க இது மேலும் தனது பங்களிப்பை வழங்கமுடியும்.
3 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்காக `நம்பமுடியாத ஆற்றலை’ ஆர்ஐசி கொண்டுள்ளது. டெல்லி, பெய்ஜிங், மாஸ்கோஇடையே ஆக்கப்பூர்வமான உரையாடலை மேம்படுத்துவதற்கான ஒரு ஆதரவான கட்டமைப்பாக இது இருக்கும். அமெரிக்கா தலைமையிலான ‘இந்தோ-பசிபிக்’ முயற்சியானது சரியல்ல. அதேநேரத்தில் பிளவுபடுத்தும் வகையிலான அமெரிக்காவின் நடவடிக்கையை இந்தியா ஏற்க மறுத்தது. இதை ரஷ்யா பாராட்டுகிறது.
இவ்வாறு டெல்லியில் ரஷ்ய தூதர் டெனிஸ் அலிப்போவ் கூறினார்.