காரைக்குடி: ஒரே பள்ளியில் படித்தபோது காதல் மலர்ந்தது. பிரான்ஸ் இளம்பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த காரைக்குடி வாலிபருக்கு, உறவினர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி வாழ்த்து தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கலைராஜன்.
இவர் பிரான்சில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது, அவரது பள்ளியில் சைக்காலஜி படிக்கும் கயல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினர். பின்னர் அவர்களுக்குள் நட்பு காதலாக மலர்ந்து, கடந்த மூன்றாண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் பச்சைக் கொடி காட்டினர். இதையடுத்து திருமணத்தை இருவீட்டாரும் தமிழ்நாட்டில், இந்து முறைப்படி இன்று காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் வீட்டில் நடத்தினர். பிரான்ஸ் பெண் கயலுக்கு, கலைராஜன் உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டினார்.
இதையடுத்து மணமக்களை உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று கூடி வாழ்த்தினர். திருமணம் குறித்து பிரான்ஸ் பெண் கயல் கூறுகையில், நாங்கள் படிக்கும் பொழுது மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தற்போது இந்தியாவில் தமிழகத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்வது சந்தோஷமாக உள்ளது என்றார்.