தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிசெல்ல தயாராக இருந்தது. அப்போது, அங்கு பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளமண பெண் சுமார் 2 வயது மதிக்கதக்க பெண்குழந்தையுடன் முன்பக்கமாக பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் இவர் தனது 2 வயது குழந்தையை பேருந்தில் தனியாக விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றுவிட்டார்.
இந்த சூழலில் பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான நேரத்தில் பேருந்து இருக்கையில் அந்த குழந்தை அழுத சப்தம் கேட்டு பயணிகள் குழந்தையின் பெற்றோரை தேடினர். ஆனால் யாரும் வராத சூழலில் அங்கிருந்தவர்கள் பொதுமக்கள் குழந்தையை மீட்டு தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தருமபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டு சென்ற மர்ம பெண் எங்கிருந்து வந்தார், குழந்தையை பேருந்தில் விட்டுவிட்டு எங்கு சென்றார் என போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பெற்றோரை காணமால் தொடர்ந்து அழுது கொண்டு இருந்த குழந்தைக்கு பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் பெண்கள் உடைமாற்றி பால் மற்றும் உணவு அளித்து தூங்க வைத்தனர். இந்நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தொப்பூர் அருகே உள்ள தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு தற்பொழுது அந்த பெண் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் இந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா .குடும்ப தகராரு காரணமாக தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றாரா இந்த குழந்தைக்கு உண்மையான பெற்றோர் யார் என கண்டறியும் பணியிலும் மற்றும் அந்த மர்ம பெண்ணையும் போலிசார் தீவிரமாம தேடி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் பேருந்தில் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.