கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலமாக 6ஆம் தேதி இரவு சென்னை வரும் ராகுல் காந்தி, 7ஆம் தேதி காலையில் அவரது தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதியம் 2 மணிக்கு ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு செல்கிறார். அன்றையதினம் மாலையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார். இதில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பாதயாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஒவ்வொரு நாளும் காலை 4 மணி நேரமும், மாலை 3 மணி நேரமும் என மொத்தம் 7 மணி நேரம் பாதயாத்திரை செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 7ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை 4 நாட்கள் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து கேரள மாநிலம் செல்கிறார்.
ராகுல் காந்தி பயணத்தையொட்டி, அது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்கனவே நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோஷ்டி பூசல்கள் இல்லாமல், ஒற்றுமையாக இணைந்து ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கவும், அவரது பயணத்துக்கான ஏற்பாடுகளையும் மாநில காங்கிரஸ் தலைமை தீவிரமாக செய்து வருகிறது. இதற்கான பணிகளை மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் சுமார் 500 பேர் வரை தங்களது மாவட்டத்தில் இருந்து தங்களது சொந்த செலவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து வரவேண்டும் என மாநில தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இது மாவட்ட தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏற்கனவே கோஷ்டி பூசல்களில் தவித்து வரும் காங்கிரஸ் கட்சி, மத்தியிலும் எட்டாண்டுகளாக ஆட்சியில் இல்லை. இதனால், கட்சியின் பெரிய தலைகள், பசையான பார்ட்டிகளை தவிர யாரிடமும் பெரிதாக பணப்புழக்கம் இல்லை. இந்த சூழலில், சொந்த செலவில் ஆட்களை அழைத்து வர வேண்டும், ராகுலின் செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டுமானால் எப்படி என்று விழிபிதுங்குகிறார்கள் கதர் கட்சியினர்.
இதுகுறித்து பெயர் வேண்டாம் என்ற கோரிக்கையோடு நம்மிடம் பேசிய சில மாவட்ட தலைவர்கள், “ராகுல் பயணத்தை அவர் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைத்து தர பிற மாநில தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து தாராளமாக செலவு செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மாநிலத் தலைமையோ எங்களிடம் செலவை பார்த்துக் கொள்ள சொல்கிறார்கள். 500 பேர் என்றால் அவர்களுக்காக போக்குவரத்து, உணவு, இதர செலவுகள் என குறைந்தது ரூ.10 லட்சமாவது செலவாகும். ஏற்கனவே, பணம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியமாகும்?” என கேள்வி எழுப்புகிறார்கள்.
கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எதுவும் பங்களிப்பு செய்வதில்லை என அதிருப்தி தெரிவிக்கும் அவர்கள், கட்சியிடம் கோடிக்கணக்கான பணம் உள்ளது. ஆனால், கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே அதனை செலவு செய்கிறார்கள். எங்களுக்கு கொடுக்க தயங்குகிறார்கள். இதுபோன்ற சூழல்களில் கட்சியை வளர்க்க தாராளமாக செலவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.